விஷம் கொடுத்து கொல்ல முயன்றனர்.. நடிகை சரிதா நாயர் பரபரப்பு தகவல்..!
விஷம் கொடுத்து கொல்ல முயன்றனர்.. நடிகை சரிதா நாயர் பரபரப்பு தகவல்..!

கேரளாவில், சோலார் பேனல் மோசடி வழக்கில் சிக்கியுள்ள சரிதா நாயர், தன்னை விஷம் கொடுத்து கொல்ல முயற்சி நடந்ததாக பரபரப்பு தகவலை வௌியிட்டுள்ளார்.
கேரளா மற்றும் தமிழகத்தில் சோலார் பேனல் அமைத்து தருவதாகக் கூறி பலரை ஏமாற்றி பல லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கில் நடிகை சரிதா நாயர் கைது செய்யப்பட்டார். அவர் மீது கேரளா மற்றும் தமிழகத்தின் பல்வேறு காவல் நிலையங்களில் ஏராளமான வழக்குகள் உள்ளன. இவர், முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி, அப்போதைய அமைச்சர்கள் சேர்ந்து தன்னை பலாத்காரம் செய்ததாக கூறிய புகார் கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், கடந்த 2015-ம் ஆண்டு கொட்டாரக்கரை அருகே சரிதா நாயர் காரில் சென்று கொண்டிருந்தார். நள்ளிரவு ஒரு கும்பல் வழிமறித்து காரை அடித்து நொறுக்கியது. பின்னர் அவரையும் தாக்க முயன்றது. இந்த வழக்கு கொட்டாரக்கரை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்த வழக்கு விசாரணையில் ஆஜராவதற்காக சரிதா நாயர் நீதிமன்றம் வந்தார். அப்போது அவர் கூறியதாவது: “எனக்கு விஷம் கொடுத்து கொல்ல முயற்சி நடந்தது. இதனால் எனது உடல் நலம் பாதிக்கப்பட்டது. நான் தற்போது வேலூர் மற்றும் திருவனந்தபுரத்தில் சிகிச்சை பெற்று வருகிறேன். உடல் நலம் தேறியதும் எனக்கு விஷம் கொடுத்தது யார்? என்பதை கூறுவேன்” இவ்வாறு அவர் கூறினார். இது, கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story

