சுற்றுலா பயணிகளே கவனம்.. ‘ஒன்வே’ ஆகிறது மேட்டுப்பாளையம் - ஊட்டி சாலை..!
சுற்றுலா பயணிகளே கவனம்.. ‘ஒன்வே’ ஆகிறது மேட்டுப்பாளையம் - ஊட்டி சாலை..!

தமிழகத்தில் வெயில் சுட்டெரிக்க தொடங்கி உள்ளதால், கோடை விடுமுறையை கொண்டாட ஏராளமானோர் ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு, டாப் சிலிப் என கோடை வாசஸ்தலங்களை நோக்கி பயணமாக தொடங்கியுள்ளனர்.
ஊட்டியில் தற்போது சீசன் துவங்கியுள்ளதால், நீலகிரி மாவட்டத்தில் நிலவும் இதமான சூழலை அனுபவிக்க தினசரி அங்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் அதிகரித்து வருகிறது. இதனால், ஊட்டி மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசலாக காணப்படுகிறது.
இதனால், ஊட்டி - குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலை வரும் 16-ம் தேதி முதல் ஒரு வழி பாதையாக மாற்றம் செய்யப்படுவதாக மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “வாகன நெரிசலை தவிர்க்கும் வகையில் ஊட்டி - குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலை வரும் 16-ம் தேதி முதல் ஒரு வழி பாதையாக மாற்றம் செய்யப்படுகிறது.
எனவே, மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் மற்றும் ஊட்டிக்கு வரும் லாரி உள்ளிட்ட கனரக வாகனங்களுக்கு இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மட்டுமே அனுமதி.
மேலும், மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி நோக்கி வரும் இதர வாகனங்கள் குன்னூர் வழியாக அனுமதி. ஊட்டியில் இருந்து கோவை மற்றும் மேட்டுப்பாளையம் செல்லும் அனைத்து வாகனங்களும் கோத்தகிரி வழியாக மட்டுமே செல்ல அனுமதி” என்று கூறப்பட்டுள்ளது.

