Theme Check

தள்ளுவண்டி வியாபாரி மீது தாக்குதல்.. பல்லடத்தில் பாஜக நிர்வாகி கைது..!

தள்ளுவண்டி வியாபாரி மீது தாக்குதல்.. பல்லடத்தில் பாஜக நிர்வாகி கைது..!

தள்ளுவண்டி வியாபாரி மீது தாக்குதல்.. பல்லடத்தில் பாஜக நிர்வாகி கைது..!
X

பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்ததாகக் கூறி பல்லடத்தில் தள்ளுவண்டி வியாபாரியை போலீசார் முன்னிலையிலேயே பாஜக நிர்வாகிகள் கொடூரமாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரதமர் மோடி அண்மையில் பஞ்சாப் மாநிலம் சென்றிருந்தார். அப்போது விவசாயிகள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இதனால், மேம்பாலம் ஒன்றில் பிரதமர் மோடியின் வாகனம் 20 நிமிடங்கள் காத்திருக்க நேரிட்டது. பின்னர் பஞ்சாப் நிகழ்ச்சிகளை பிரதமர் மோடி ரத்து செய்தார்.

டில்லி திரும்புவதற்கு முன்னதாக, நான் உயிரோடு திரும்பியதற்கு உங்கள் முதல்வருக்கு நன்றி சொல்லுங்க என பிரதமர் மோடி கூறியதாக தகவல்கள் வெளியாகின. இதனைத் தொடர்ந்து, திட்டமிட்டே பஞ்சாப் மாநில அரசு மோடிக்கு எதிராக சதி செய்தது என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

இருப்பினும் பாஜக அதை விட்டுவிடுவதாக இல்லை. நாடு முழுவதும் பிரதமர் மோடியின் உயிருக்கு ஆபத்து என்கிற முழக்கத்தை முன்வைத்து ஆளுநர்களை சந்தித்து மனு கொடுப்பது; போராட்டங்களை நடத்துவது என களமிறங்கியது. தமிழகத்திலும் இதே செயல்திட்டத்தை பாஜக செயல்படுத்தியது. இதன் ஒருபகுதியாக பல்லடத்தில் நேற்று பாஜகவினர் போராட்டம் நடத்தினர்.

அப்போது தள்ளுவண்டி வியாபாரி ஒருவர் பிரதமர் மோடியை மிக கடுமையாக விமர்சித்தாக கூறப்படுகிறது. அதனால் ஆத்திரம் அடைந்த பாஜகவினர் தள்ளுவண்டி வியாபாரியை தாக்கினர். அவர் உயிருக்கு அஞ்சி அருகே இருந்த ஒரு கடைக்குள் சென்று பதுங்கிக் கொண்டார்.

கடையின் உள்ளேயும் வெளியேயும் போலீசார் நின்று கொண்டனர். வெளியே நின்ற போலீசார் பாஜகவினர் டேய்! வெளியே வாடா! வாடா என குரல் எழுப்பிக் கொண்டிருந்ததால் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றனர்.

ஆனாலும் சில பாஜக நிர்வாகிகள் போலீசாரையும் மீறி கடைக்குள் நுழைந்து தள்ளுவண்டி வியாபாரியை கொடூரமாக தாக்கினர். இதில் அதே இடத்திலேயே அந்த வியாபாரி நிலைகுலைந்து விழுந்தார். பொதுமக்கள் மற்றும் போலீசார் முன்னிலையிலேயே பாஜகவினர் கொடூரமாக தாக்கியதை கண்டு அங்கிருந்த பெண்கள் அழுது ஓலமிட்டபடி அலறி ஓடினர்.

மேலும் போலீசார் பாஜகவினரை வெளியேற்றி தாக்குதலுக்கு உள்ளான வியாபாரியை மீட்டு காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் பல்லடம் அடுத்த அம்மாபாளையம் பகுதியை சேர்ந்த முத்துசாமி என்பதும் தள்ளுவண்டியில் வாழைப்பழம் விற்பனை செய்து வருவதும் தெரியவந்தது.

தாம் மோடியை விமர்சிக்கவிலை என்றும் தள்ளுவண்டியை நகர்த்த முடியாமல் பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்; அதனால் போராட்டம் முடிந்து விட்டதே நகருங்கள் என சொன்னதாகவும் அந்த ஆத்திரத்தில்தான் பாஜகவினர் தன்னை தாக்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், தள்ளுவண்டி வியாபாரி மீது தாக்குதல் நடத்திய பாஜகவினர் 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, பாஜக இளைஞரணி நிர்வாகி ரமேஷ் என்பவரை கைது செய்துள்ளனர். அதேபோல், பாஜகவினர் அளித்த புகாரில் வியாபாரி முத்துசாமி மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Next Story
Share it