பதற்றம் அதிகரிக்க வாய்ப்பு.. பாஜக மாநில தலைவர் கைது..!
பதற்றம் அதிகரிக்க வாய்ப்பு.. பாஜக மாநில தலைவர் கைது..!

பாஜக செய்தித் தொடர்பாளராக இருந்து வந்த நூபுர் சர்மா டிவி விவாதம் ஒன்றில் பங்கேற்று பேசுகையில் நபிகள் நாயகம் பற்றி ஆட்சேபகரமான கருத்துக்களை வெளியிட்டார்.
இதில், நூபுர் சர்மாவின் கருத்தை ஆதரித்து மற்றொரு பாஜக நிர்வாகியான நவீன் ஜிண்டால் கருத்து வெளியிட்டார். இது சர்ச்சையை ஏற்படுத்தியதுடன் 57 இஸ்லாமிய நாடுகளின் எதிர்ப்புக்கு வழி வகுத்தது.
இவர்கள் இருவர் மீதும் பாஜக மேலிடம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கிடையே, நுபுர் சர்மாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி, உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், ஜார்கண்ட் மாநிலங்களில் இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், மேற்கு வங்கத்தின் ஹவுரா பகுதியில் வன்முறை வெடித்தது.
இது தொடர்பாக முதல்வர் மம்தா பானர்ஜி தனது ட்விட்டரில், “இந்த வன்முறைகளுக்கு பின்னால் சில அரசியல் கட்சிகள் உள்ளன. அவர்கள் கலவரத்தை தூண்ட முயற்சிக்கிறார்கள்.
இதை எங்களால் பொறுத்துக் கொள்ள முடியாது. கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பாஜக செய்யும் பாவங்களால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்” எனத் தெரிவித்தார்.
இந்நிலையில், கலவரம் ஏற்பட்ட ஹவுரா பகுதிக்குச் செல்ல முயன்ற பாஜக மாநில தலைவர் சுகந்தா மஜூம்தாரை போலீசார் கைது செய்தனர்.
பாஜக தலைவர் ஹவுரா சென்றால் மேலும் பதற்றம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்பதால் அவரை தடுப்புக் காவலில் கைது செய்திருப்பதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

