தமிழகத்தை இரண்டாக பிரிப்பது பாஜகவின் நிலைப்பாடு இல்லை..!
தமிழகத்தை இரண்டாக பிரிப்பது பாஜகவின் நிலைப்பாடு இல்லை..!

தமிழகத்தை இரண்டு மாநிலமாகப் பிரிக்கவேண்டும் என்பது குறித்தும், அது குறித்து பரிசீலனை செய்யப்படுகிறது என்பதும் பாஜகவின் நிலைப்பாடு அல்ல” என, பாஜக ஊடகப் பிரிவு செயலாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் விளக்கம் அளித்துள்ளார்
தமிழ்நாட்டில் இருந்து கோயமுத்தூரை தலைமை இடமாகக் கொண்டு புதிய மாநிலத்தை உருவாக்க மத்திய பாஜக அரசு திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியான நிலையில் கொங்குநாடு குறித்த விவாதம் சமூகவலைதளங்களில் பேசுபொருளானது.
பாஜகவின் தேசிய மகளிர் அணி செயலாளரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் ‘கொங்குதேர் வாழ்க்கை’ என்ற பாடலைப் பதிவிட்டிருந்தார்.
நேற்றைய தினம் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக பொதுச்செயலாளர் கரு.நாகராஜன், “அந்தந்த பகுதி மக்கள் என்ன நினைக்கிறார்களோ, அதனை நிறைவேற்றுவது அரசின் கடமை” எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தமிழகத்தை இரண்டாக பிரிப்பது பாஜகவின் நிலைப்பாடு இல்லை என பாஜக ஊடக பிரிவு தலைவர் ஏ.என்.எஸ்.பிரசாத் விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது முகநூல் பதிவில், “கொங்குநாடு குறித்தும், தமிழகத்தை இரண்டு மாநிலமாக பிரிக்க வேண்டும் என்பது குறித்தும், அது குறித்து பரிசீலனை செய்யப்படுகிறது என்பதும் பாஜகவின் நிலைப்பாடு அல்ல. இதுகுறித்து தமிழக பாஜகவின் மாநில தலைவர் மற்றும் அமைப்பு பொதுச்செயலாளர் அதிகாரப்பூர்வமான முறையில் எந்தவித கருத்தும் வெளியிடவில்லை.
எனவே நம்முடைய தனிப்பட்ட எண்ணங்களை கட்சியின் கருத்தாக பாஜக கூட்டங்களில், பத்திரிகை பேட்டிகளில், சமூக வலைதளங்களில் யாரும் தெரிவிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.
கொங்கு நாடு என்பது வரலாறு. அன்றைய சிறு குறு நில மன்னர்கள் பல்வேறு பகுதிகளில் இதுபோன்று அழைப்பது உண்டு. ஆனால், இன்றைய சூழ்நிலையில் கொங்குநாடு உருவாக வேண்டும் என்பது பாஜக கருத்து அல்ல. வளமான தமிழகம்; வலிமையான பாரதம் என்பதுதான் பாஜகவின் லட்சியம்.
நம்முடைய நல்லெண்ணங்களை, சிந்தனைகளை, கருத்துகளை யாரும் திரித்து வெளியிட்டு, சமூகவலைதளங்களின் செயல்படும் தமிழின விரோத சக்திகள் மக்களை குழப்புவதற்கு இடம் தரவேண்டாம்” என, விளக்கம் அளித்துள்ளார்.