#BREAKING:- இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பன்ட்டுக்கு கொரோனா தொற்று உறுதி..!
#BREAKING:- இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பன்ட்டுக்கு கொரோனா தொற்று உறுதி..!

டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்தில் தங்கியிருக்கும் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பன்ட்டுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்துடனான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்குப் பின்னர் தொடர்ந்து இங்கிலாந்திலேயே தங்கியிருக்கிறது. ஆகஸ்ட் 4ம் தேதி முதல் இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் தொடங்கவிருக்கும் நிலையில் இப்போது ரிஷப் பன்ட் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருக்கிறார்.
இந்திய அணி வரும் ஜூலை 20 முதல் கவுன்ட்டி அணியுடன் மூன்று நாள் பயிற்சி போட்டியில் விளையாட இருக்கிறது. இதற்காக இந்திய அணியினர் மீண்டும் பயோபபுளில் இணைந்த நிலையில்தான் ரிஷப் பன்ட்டுக்கு கொரோனா என்கிற தகவல் வெளியாகியிருக்கிறது.
ரிஷப் பன்ட்டுக்கு 8 நாட்களுக்கு முன்னரே கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அவர் ஒரு வாரமாக தனிமையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரோடு தொடர்பில் இருந்த மூன்று பேரும் தனிமைப்படுத்தப்பட்டு பின்னர் அணிக்குள் இணைந்து விட்டனர் என்கிற தகவலும் வெளியாகியிருக்கிறது.
துர்ஹாமில் 20ம் தேதி தொடங்கவிருக்கும் பயிற்சி போட்டியில் ரிஷப் பன்ட் விளையாட மாட்டார் எனத் தெரிகிறது. ரிஷப் பன்ட்டுக்கு எந்தவிதமான நோய் அறிகுறிகளும் இல்லாததால் அவர் இன்னும் ஒரு வாரத்துக்குள் உடல் நலம் தேறி அணிக்குள் இணைந்து விடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இன்னொரு பக்கம், ரிஷப் பன்ட்டுக்கு மாற்றாக சஞ்சு சாம்சன் இங்கிலாந்து போவார் என்கிற தகவல்கள் பரவிக்கொண்டிருக்கிறது.
டெஸ்ட் சாம்பியன்ஷிப் முடிந்ததுமே இந்திய வீரர்களை பயோபபுளில் இருந்து விடுவிடுத்து ஜூலை 15ம் தேதிக்குள் மீண்டும் பயோபபுளில் இணைய வேண்டும் என அறிவுறுத்தியிருந்தது பிசிசிஐ. ஆனால், இந்திய வீரர்கள் யூரோ கோப்பை கால்பந்து போட்டிகள், விம்பிள்டன் போட்டிகள் என மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்குப் போனதால் பிசிசிஐ எச்சரிக்கை கடிதமும் அனுப்பியது. இந்த சூழலில்தான் ரிஷப் பன்ட்டுக்கு கொரோனா தொற்று பரவியிருக்கிறது.

