சிலிண்டர் வெடித்து பற்றி எரிந்த அடுக்குமாடி குடியிருப்பு.. தாய்-மகள் கருகி பலி: பதைபதைப்பை ஏற்படுத்தும் வீடியோ !
சிலிண்டர் வெடித்து பற்றி எரிந்த அடுக்குமாடி குடியிருப்பு.. தாய்-மகள் கருகி பலி: பதைபதைப்பை ஏற்படுத்தும் வீடியோ !

அடுக்குமாடி குடியிருப்பில் சிலிண்டர் வெடித்து சிதறியதில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் தாய்-மகள் உடல் கருகி உயிரிழந்தனர்.
கர்நாடகா மாநிலம் பெங்களூரு பேகூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பன்னரகட்டா சாலை தேவரசிக்கனஹள்ளியில் அஸ்ரிதா என்ற பெயரில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. 4 மாடிகளை கொண்ட இந்த குடியிருப்பில் 100 க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. இந்த நிலையில் நேற்று மாலை திடீரென அந்த அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள 2-வது மாடியில் உள்ள ஒரு வீட்டில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின்பேரில் அங்கு விரைந்து சென்ற தீயணைப்பு படையினர் அடுக்குமாடி குடியிருப்பில் தீயை அணைக்க நடவடிக்கை எடுத்தனர். ஆனாலும் தீ மளமளவென வேகமாக பரவி 4 மாடிகளுக்கும் எரிந்தது. இதனால் தீயை அணைக்க தீயணைப்பு படையினர் சிரமப்பட்டனர்.
ஆனாலும் தீயணைப்பு படையினர் அடுக்குமாடி குடியிருப்பின் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் அடுக்குமாடி குடியிருப்பில் பிடித்த தீ அணைக்கப்பட்டது. இதன்பின்னர் அடுக்குமாடி குடியிருப்புகளில் இருந்தவர்கள் மீட்கப்பட்டனர்.

எனினும், குடியிருப்பில் 210ஆவது அறையில் வசித்து வந்த லட்சுமி தேவி (82) மற்றும் அவருடைய மகள் பாக்யா ரேகா (59) ஆகிய 2 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த 5 பேர் பலத்த தீக்காயம் அடைந்தனர். அவர்களில் 2 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
முதற்கடட விசாரணையில் அடுக்குமாடி குடியிருப்பில் 2-வது மாடியில் ஒரு வீட்டில் இருந்த கியாஸ் சிலிண்டர் வெடித்து சிதறியதில் தீ விபத்து ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். தீ விபத்து நடந்த போது அந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசித்த வந்த ஏராளமானோர் வேலை உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்காக வெளியே சென்று இருந்ததாக கூறப்படுகிறது. இல்லாவிட்டால் பலி எண்ணிக்கை இன்னும் அதிகமாகி இருக்கும் என்று அஞ்சப்படுகிறது.
newstm.in

