கல்குவாரி விபத்து – தலைமறைவாக இருந்த உரிமையாளர் கைது!!
கல்குவாரி விபத்து – தலைமறைவாக இருந்த உரிமையாளர் கைது!!

நெல்லை கல்குவாரி விபத்தில் தேடப்பட்டு வந்த உரிமையாளர் செல்வராஜ் மற்றும் அவரது மகன் குமார் இருவரையும் மங்களூரில் தனிப்படையினர் கைது செய்தனர்.
பொன்னாக்குடி அருகே அடைமிதிப்பான்குளம் குவாரியில் கடந்த 14ஆம் தேதி இரவு ஏற்பட்ட நிலச்சரிவில் ஆறு பேர் சிக்கிக் கொண்டனர். மறுநாள் காலை முருகன், விஜய் ஆகிய இருவர் உயிருடன் மீட்கப்பட்டனர். அவரைத் தொடர்ந்து மீட்கப்பட்ட செல்வம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை இரவு தேசிய பேரிடர் மீட்புப்படையினர், லாரி கிளீனர் முருகனை சடலமாக கண்டெடுத்தனர். தொடர்ந்து செவ்வாய்க்கிழமை காலை ஐந்தாவது நபரின் உடல், பாறை குவியலுக்குள் இருப்பது அடையாளம் காணப்பட்டது.

ஆனால் உடலை வெளியே எடுப்பதில் சிக்கல் இருந்ததால் 30 மணி நேர போராட்டத்திற்கு பிறகு வெடி வைத்து பாறைகளை உடைத்து உடல் வெளியே எடுக்கப்பட்டது. 5ஆவதாக மீட்கப்பட்ட தொழிலாளர் லாரி ஓட்டுநர் செல்வகுமார் (30) எனத் தெரியவந்தது.
விபத்தில் சிக்கிய 6 பேரில், 5 பேர் மீட்கப்பட்ட நிலையில் இன்னும் ஒருவர் உடல் மீட்கப்பட வேண்டியுள்ளது. இந்நிலையில், தேடப்பட்டு வந்த கல்குவாரி உரிமையாளர் செல்வராஜ் மற்றும் அவரது மகன் குமார் இருவரையும் மங்களூரில் தனிப்படையினர் கைது செய்துள்ளனர்.
newstm.in

