நீட் கலந்தாய்வில் இவர்கள் பங்கேற்க முடியுமா..?: என்.எம்.சி பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு..!
நீட் கலந்தாய்வில் இவர்கள் பங்கேற்க முடியுமா..?: என்.எம்.சி பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு..!

கேரளாவைச் சேர்ந்த டி.ஜலாலுதீன் உள்ளிட்டோர், “12-ம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதிய தனித்தேர்வர்கள் நீட் கலந்தாய்வில் பங்கேற்க முடியுமா..?” என்பது குறித்து தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.
மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் கெங்கேலே, நீட் கலந்தாய்வில் பங்கேற்கும் தனித்தேர்வர்கள் 11-ம் வகுப்பு மதிப்பெண் பட்டியலை பதிவேற்றம் செய்ய வேண்டியதில்லை என ராஜஸ்தான், உத்தராகண்ட். இமாசல பிரதேசம், அசாம் ஆகிய மாநில அரசுகள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டினார்.
தேசிய மருத்துவ கவுன்சில் சார்பில் ஆஜரான வக்கீல் கவுரவ் சர்மா, நீட் இளநிலை தேர்வு கையேட்டின்படி, 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை திறந்தவெளி கல்வி முறை அல்லது தனியாக தேர்வு எழுதியவர்கள் நீட் தேர்வு எழுத தகுதியற்றவர்கள்.
மேலும், 10 மற்றும் 12-ம் வகுப்புகளை தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் செய்முறை தேர்வுடன் படித்திருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், மத்திய பிரதேசம், பஞ்சாப் மாநிலங்கள் தவிர்த்து ஏனைய மாநிலங்கள், 12-ம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதிய தனித்தேர்வர்களை நீட் தேர்வை எழுத அனுமதித்து வருகின்றன. இது தொடர்பாக மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது என வாதிட்டார்.
அப்போது நீதிபதிகள், 12-ம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதிய தனித்தேர்வர்கள் நீட் கலந்தாய்வில் பங்கேற்க முடியுமா..? என்பது குறித்து தெளிவான பதில் மனுவை தேசிய மருத்துவ கவுன்சிலில் (என்.எம்.சி) தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, இந்த வழக்கு விசாரணையை வரும் 8-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

