விநாயகர் காலடியில் வேட்பாளர் பட்டியல்.. அமைச்சர் முன்னிலையில் திமுகவினர் சிறப்பு பூஜை..!
விநாயகர் காலடியில் வேட்பாளர் பட்டியல்.. அமைச்சர் முன்னிலையில் திமுகவினர் சிறப்பு பூஜை..!

திண்டிவனம் அருகே உள்ள விநாயகர் கோயிலில், அமைச்சர் மஸ்தான் முன்னிலையில் திமுக வேட்பாளர் பட்டியலுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தீவனூரில் சுயம்பு பொய்யாமொழி விநாயகர் கோயில் உள்ளது. இக்கோவிலுக்கு நேற்று பகல் 12:30 மணிக்கு விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் அமைச்சர் மஸ்தான் கட்சி நிர்வாகிகளுடன் சென்றார்.

கட்சி தலைமைக்கு அனுப்புவதற்காக மஞ்சள் பையில் கொண்டு வந்திருந்த திண்டிவனம் நகராட்சி மற்றும் செஞ்சி, அனந்தபுரம், மரக்காணம் ஆகிய பேரூராட்சிகளில் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் விநாயகரின் காலடியில் வைக்கப்பட்டது. தொடர்ந்து, அதற்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.

‘பூஜை செய்யப்பட்ட வேட்பாளர் பட்டியல், முறைப்படி கட்சி தலைமைக்கு அனுப்பி வைக்கப்படும்' என அங்கிருந்த கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர். திண்டிவனம் நகர பொருளாளர் கண்ணன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ரமணன், ஒன்றிய கவுன்சிலர் அண்ணாதுரை, நந்தா உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

