“இனியும் இதை எல்லாம் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது” : சசிகலா
“இனியும் இதை எல்லாம் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது” : சசிகலா

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு போட்டியிடுவோருக்கான வேட்புமனு தாக்கல் செய்ய அதிமுக அலுவலகம் வந்தவர்கள் விரட்டியடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அதற்கு சசிகலா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலில் போட்டியிடுபவர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய நேற்று கடைசி நாள். அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நேற்று தங்களது வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.
இந்நிலையில், வேட்பு மனு வாங்க சென்றவர்கள் அதிமுக தொண்டர்களால் தாக்கப்பட்டனர். இந்நிலையில், தொண்டர்கள் மீது விழும் ஒவ்வொரு அடியும் ஒட்டுமொத்த கழக உடன்பிறப்புகளின் மீது விழுந்த அடியாகவும், என் மீது விழுந்த அடியாகவும்தான் நான் நினைக்கிறன் என்று சசிகலா கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சியினரும் பார்த்து பொறாமை படும் அளவுக்கு ஒளிர்ந்த நம் இயக்கத்தின் இன்றைய நிகழ்வுகளைப் பார்க்கும்போது ஒவ்வொரு தொண்டனும் வெட்கப்படவேண்டிய ஒன்றாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.
என்றைக்கு நம் புரட்சித்தலைவி நம்மை விட்டு சென்றார்களோ அன்று முதல் இன்று வரை நம் இயக்கத்தில் நடைபெறும் செயல்களை பார்க்கும்போது என் மனது மிகவும் வேதனைப்படுகிறது என தெரிவித்துள்ளார்.
இன்று, நம் தொண்டர்களின் நிலையை இருபெரும் தலைவர்களும் கண்ணீரோடுதான் பார்த்துக்கொண்டு இருப்பார்கள். அவர்கள் கட்டி காத்த இந்த இயக்கத்தை சிரழித்துவிடாதீர்கள். இனியும் இதை எல்லாம் பார்த்துக்கொண்டு என்னை போன்றவர்களால் சும்மா இருக்க முடியாது.

ஒரு தலைமையால்தான் அந்த வலியை உணரமுடியும். ஆணிவேரான தொண்டர்கள் இருந்தால்தான் இந்த இயக்கம் ஆலமரமாக தழைத்தோங்கும். இதை ஒவ்வொருவரும் மனதில் வைத்து, நம் தலைவர்கள் காட்டிய வழியில், ஒற்றுமையுடன் இருந்தால் தான் வரும் நாட்களில், நம் எதிரிகளை வெல்ல முடியும் என்பதன் அவசியத்தை உணர்ந்தாக வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன். என சசிகலா தெரிவித்துள்ளார்.
newstm.in

