20 யூடியூப் சேனல்களை முடக்கிய மத்திய அரசு... மோடி ஆட்சியில் இதுவே முதல் நடவடிக்கை !
20 யூடியூப் சேனல்களை முடக்கிய மத்திய அரசு... மோடி ஆட்சியில் இதுவே முதல் நடவடிக்கை !

உலகம் முழுவதும் தற்போதைய நவீனமயமான காலத்தில் யூடியூப் சேனல்கள் அதிகரித்து வருகிறது. செல்போனில் படம் பிடித்தும் அப்லோடு செய்யலாம் என்பதால் எளிதான ஒன்றாகவும் இருக்கிறது. அதிக லாபமும் கொட்டுகிறது. அதேநேரத்தில் எந்த அளவுக்கு உண்மை உள்ளதோ அதே அளவுக்கு போலி செய்திகளையும் பலரும் பரப்பி வருகின்றனர்.
அந்த வகையில், பாகிஸ்தானில் நயா பாகிஸ்தான் என்ற பெயரில் யூடியூப் சேனல் ஒன்று செயல்பட்டு வருகிறது. 20 லட்சம் பின் தொடர்பவர்களுடன் செயல்படும் அந்த யூடியூப் சேனல் பாகிஸ்தானின் உள்நாட்டு உளவுத்துறை உதவியுடன் இந்தியாவிற்கு எதிராக தொடர்ந்து பொய் செய்திகளை பதிவிட்டு வருகிறது.

குறிப்பாக காஷ்மீர் விவகாரம், விவசாயிகள் போராட்டம், அயோத்தியா உள்பட இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்கள் குறித்து பாகிஸ்தான் யூடியூப் சேனல் பொய்யான தகவல்களை பதிவிட்டு வருவது தெரியவந்தது. இதனையடுத்து மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை செயலாளர் அபூர்வ சந்திரா அந்த சேனலை தடை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு யூடியூப் நிர்வாகம் மற்றும் தொலை தொடர்புத்துறைக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து நயா பாகிஸ்தான் யூடியூப் சேனல் முடக்கப்பட்டது. இதேபோல் பாகிஸ்தானில் இருந்து இந்திய இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடுக்கு எதிராக செயல்பட்டு வரும் மேலும் 19 யூடியூப் சேனல்களும் மற்றும் இரண்டு இணையதளங்களும் முடக்கப்பட்டுள்ளன.

இந்த சேனல்களின் மொத்த பார்வையாளர்கள் எண்ணிக்கை 50 கோடி வரை இருக்கும் என்று மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, முதன் முறையாக தகவல் தொழில்நுட்ப சட்ட வழிகாட்டுதல் மற்றும் டிஜிட்டல் மீடியா நெறிமுறைகளின் கீழ் அவசர கால அதிகாரங்களை பயன்படுத்தி இந்த நடவடிக்கையை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
newstm.in

