மத்திய அமைச்சரவையில் மாற்றம்.. மத்திய அமைச்சராகிறார் ஓபிஎஸ் மகன்? நாளை அறிவிப்பு !
மத்திய அமைச்சரவையில் மாற்றம்.. மத்திய அமைச்சராகிறார் ஓபிஎஸ் மகன்? நாளை அறிவிப்பு !

மத்தியில் தொடர்ந்து இரண்டாவது முறையாக பாஜக வெற்றிபெற்று நரேந்திர மோடி பிரதமராக பதவி வகித்து வருகிறார். கடந்த 2019ஆம் ஆண்டு மே மாதம் 30ஆம் தேதி பிரதமர் மோடி தலையிலான அமைச்சரவை பதவி ஏற்றது. அதன் பிறகு இதுவரை அமைச்சரவையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
மோடியின் அமைச்சரவையில் அப்போதைய கூட்டணி கட்சிகளான சிவசேனா, அகாலிதளம், லோக்ஜன சக்தி, இந்திய குடியரசு கட்சி ஆகியவை இடம்பெற்றிருந்தன. இதில் அகாலிதளம், சிவசேனா கட்சிகள் கூட்டணியில் இருந்து விலகி விட்டன. லோக்ஜனசக்தி சார்பில் மந்திரியாக இருந்த ராம்விலாஸ் பஸ்வான் இறந்து விட்டார்.

தற்போது கூட்டணி கட்சிகளில் குடியரசு கட்சியை சேர்ந்த ராம்தாஸ் அத்வாலே மட்டுமே அமைச்சராக உள்ளார். இந்த நிலையில் மத்திய அமைச்சரவையை மாற்றி அமைக்கவும் புதிதாக பலருக்கு அமைச்சர் பதவி அளிக்கவும் பிரதமர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது அமைச்சரவையில் 81 பேர் அமைச்சர்களாக இருக்கலாம். ஆனால் தற்போது 53 பேர் மட்டுமே அமைச்சரவையில் உள்ளளனர். இதனால் புதிதாக 28 அமைச்சர்களை நியமிக்க திட்டமிட்டுள்ளதாக புதிய தகவல் வெளிவந்துள்ளது.
உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. எனவே அந்த மாநிலங்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்க பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார். பீகாரில் பாஜக கூட்டணியில் உள்ள நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளத்துக்கு 2 அமைச்சர் பதவி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல், காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த மூத்த தலைவர் ஜோதிர்ஆதித்யசிந்தியா அமைச்சரவையில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய அமைச்சரவை தொடர்பாக நாளை நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டு பிரதமர் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே இது தொடர்பாக பிரதமர் மோடி மூத்த தலைவர்களுடன் பல கட்ட ஆலோசனைகளை நடத்தினார். அதைத் தொடர்ந்து பட்டியல் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. இதனிடையே அதிமுகவுக்கு அமைச்சர் பதவி வழங்க பிரதமர் மோடி விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அதிமுகவின் ஒரே எம்பியான ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திர நாத்குமாருக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
newstm.in

