பருவநிலை மாற்றத்தால் ஆபத்து.. 14% பவளப்பாறைகள் அழிவு.. விஞ்ஞானிகள் எச்சரிக்கை !!
பருவநிலை மாற்றத்தால் ஆபத்து.. 14% பவளப்பாறைகள் அழிவு.. விஞ்ஞானிகள் எச்சரிக்கை !!

ஆஸ்திரேலியாவின் வட கிழக்கு கடலோரப் பகுதியில், ‘தி கிரேட் பேரியர் ரீஃப்’(The Great Barrier Reef) என்று அழைக்கப்படும் உலகின் மிகப்பெரிய பவளப்பாறை திட்டு அமைந்துள்ளது. இந்த பவளப்பாறை திட்டு கடலுக்கு அடியில் அமைந்திருப்பது தான் அதன் சிறப்பு. இது தவிர தெற்கு ஆசியா, பசிபிக் பெருங்கடல், கிழக்கு ஆசியா, மேற்கு இந்திய பெருங்கடல், வளைகுடா பகுதிகள் உள்ளிட்ட கடற்பகுதிகளில் பவளப்பாறைகள் அதிக அளவில் காணப்படுகின்றன.

கடந்த ஜூன் மாதம் ஐ.நா.வின் யுனேஸ்கோ அமைப்பின் குழு வெளியிட்ட பரிந்துரையின்படி, பருவநிலை மாற்றம் மற்றும் புவி வெப்பமயமாதல் காரணமாக கடல்களில் ஏற்படும் வெப்ப அலைகளினால், ஆஸ்திரேலியாவின் ‘தி கிரேட் பேரியர் ரீஃப்’ பவளப்பாறை திட்டிற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும், இதை அழியும் நிலையில் உள்ள புராதான சின்னங்கள் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் உலகளாவிய பவளப்பாறை கண்காணிப்பு அமைப்பு சார்பில், 300 விஞ்ஞானிகள் இணைந்து உலகின் பல்வேறு பகுதிகளில் பவளப்பாறைகளின் நிலை தொடர்பாக ஆய்வு மேற்கொண்டனர். இது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையின்படி, 73 நாடுகளில் உள்ள 12 ஆயிரம் இடங்களில் ஆய்வு மேற்கொண்டதில், கடந்த 2009 முதல் 2018-ம் ஆண்டு வரை சுமார் 11,700 சதுர கிலோமீட்டர் அளவிலான பவளப்பாறைகள் அழிந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது உலக அளவில் 14 சதவீதம் ஆகும்.

இதில் ‘தி கிரேட் பேரியர் ரீஃப்’ பவளப்பாறையும் வேகமாக அழிவைச் சந்தித்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கடல்நீரின் வெப்பம் வழக்கத்தை விட அதிகரிக்கும்போது பவளப்பாறைகள் தமது நிறத்தை இழந்து வெளுக்கத் தொடங்குகின்றன. இதன் மூலம் பவளப்பாறைகளின் அழிவைத் தெரிந்து கொள்ள முடியும். பவளப்பாறைகள் அழிந்தால் அதைச் சார்ந்து வாழும் மீன்கள் உள்ளிட்ட ஏராளமான கடல் உயிரினங்களுக்கும் பெரும் பாதிப்பு ஏற்படும். புவி வெப்பமயமாதலை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், பவளப்பாறைகள் முழுவதுமாக அழிந்துவிடும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
newstm.in

