கோவையில் போதை ஊசி பயன்படுத்திய கல்லூரி மாணவர் பலி..!!
கோவையில் போதை ஊசி பயன்படுத்திய கல்லூரி மாணவர் பலி..!!

கோவை மாவட்டம் மதுக்கரை அருகே உள்ள தனியார் பொறியில் கல்லூரியில் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த அஜய்குமார் (20) என்ற மாணவர் பிஇ 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் அந்த பகுதியில் அறை எடுத்து தனது நண்பர்களுடன் தங்கியிருந்தார். இந்த நிலையில் கடந்த 13-ந் தேதி அஜய்குமாருக்கு திடீரென வாந்தி எடுத்து மயக்கமடைந்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த சக நணபர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர் வரும் வழியிலேயே அஜய்குமார் உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளார்.

இது தொடர்பாக மாணவனின் தந்தை சௌந்தரபாண்டியன் கொடுத்த புகாரின் பேரில் இயற்கைக்கு முரணான மரணம் என மதுக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் உயிரிழந்த மாணவனின் பிரேத பரிசோதனை அறிக்கையில் இடது முன் கையில் நரம்பு வழியாக போதை ஏற்படுத்தக்கூடிய மருந்துக்களை ஊசி மூலம் ஏற்றப்பட்டதால் இறப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்தது.
இதையடுத்து, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில், போலீசார் மேற்கொண்ட விசாரணையில், உயிரிழந்த மாணவர் அஜய்குமார் வலி நிவாரண மாத்திரைகளை மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் தண்ணீரில் கரைத்து சிரிஞ்சு மூலமாக போதைக்காக தனக்குத்தானே செலுத்திக் கொண்டது தெரியவந்தது.

தொடர்ந்து அஜய்குமாரின் நண்பர்களை விசாரணை செய்ததில் மேற்கண்ட வலி நிவாரண மாத்திரைகளை கும்பகோணத்தில் உள்ள மருந்து கடை வைத்திருக்கும் முகமது பஷீர் என்பவர் மருத்துவரின் பரிந்துரை இல்லாமல், லாப நோக்கத்தோடு அஜய்குமாருக்கு ஆன்லைன் மூலம் விற்பனை செய்தது கண்டறியப்பட்டது. எனவே மேற்படி வழக்கின் சட்டப்பிரிவை மாற்றம் செய்து, போதை ஏற்படுத்த கூடிய வலி நிவாரண மாத்திரைகளை மருத்துவர் பரிந்துரை இல்லாமல் விற்பனை செய்த குற்றத்திற்காக முகமது பஷீரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மாணவர்கள் இளம் வயதிலேயே போதை போன்ற தவறான வழியில் செல்லக் கூடாது என்றும், யாரும் மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் எவ்வித மருந்துகளையும் உட்கொள்ளக் கூடாது எனவும் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுரை வழங்கியுள்ளார்.

