”யார் வந்தாலும் வெட்டனும்...” சென்னையில் கல்லூரி மாணவர்கள் மோதல்!!
”யார் வந்தாலும் வெட்டனும்...” சென்னையில் கல்லூரி மாணவர்களுக்கு இடையே மோதல்!!

சென்னையில் கல்லூரி மாணவர்களுக்கு இடையேயான மோதலில், ஒரு மாணவர் கத்தியால் சரமாரியாக வெட்டப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
திருமங்கலத்தைச் சேர்ந்த நேரு (19), பிரசிடென்சி கல்லூரியில் பி.ஏ மூன்றாமாண்டு படித்து வருகிறார். இவர் கல்லூரி முடித்து வீட்டிற்கு செல்வதற்காக தனது பைக்கில் அவரது நண்பர் பாலச்சந்தர் என்பவருடன் சென்றுள்ளார். சூளைமேடு நெல்சன் மாணிக்கம் சாலை பேருந்து நிலையம் அருகே வரும்போது, பச்சையப்பன் கல்லூரியை சேர்ந்த மூன்றாம் ஆண்டு பி.எஸ்சி படித்துவரும் கார்த்திக் மற்றும் அவரது நண்பர்கள் என 12 மாணவர்கள் சேர்ந்து நேருவை வழிமறித்துள்ளனர். ”நீ பிரசிடென்சி கல்லூரியில் படிக்கிறவன்தானே” என்று ஐடி கார்டை பறிவித்துவிட்டு கடுமையாக தாக்கினர். பின்னர் தாங்கள் வைத்திருந்த கத்தியால், நேருவை தாக்கிவிட்டு பைக்கை எடுத்து சென்று விட்டனர். உடனே அருகில் இருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கார்த்திக்கிடம் இருந்த இரண்டரை அடி நீளமுள்ள கத்தியை பறிமுதல் செய்து அவரைப் பிடித்தனர். அவரது நண்பர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். மேலும், காயம்பட்ட மாணவர் நேருவை போலீசார் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், ஆவடியில் வைத்து பிரசிடென்சி கல்லூரி மாணவர்கள் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களை தாக்கியுள்ளனர். அதற்கு பழிவாங்கும் விதமாக பதிலாக பிரசிடென்சி கல்லூரி மாணவர்கள் யார் வந்தாலும் தாக்கவேண்டும் என்ற நோக்கத்தில் நேரு மீது தாக்கியுள்ளார்கள் எனத் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
newstm.in



