தொடரும் துப்பாக்கி சூடு.. 10 பேர் பலி.. ரத்தக்களறியான அமெரிக்கா சூப்பர் மார்க்கெட் !!
தொடரும் துப்பாக்கி சூடு.. 10 பேர் பலி.. ரத்தக்களறியான அமெரிக்கா சூப்பர் மார்க்கெட் !!

அமெரிக்காவில் சூப்பர் மார்க்கெட்டில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் உயிரிழந்தனர்.
அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாள்தோறும் அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இதனை தடுக்க அரசு நடவடிக்கை எடுத்தாலும் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருவது குறிப்பிடத்தக்கது.

கடந்த வாரம் அமெரிக்காவின் அட்லாண்டாவில் நடந்த துப்பாக்கி சூட்டில் 8 பேர் கொல்லப்பட்டனர். இந்த பதற்றம் அடங்குவதற்குள் மீண்டும் அதேபோன்ற சம்பவம் அங்கு நடந்துள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் போல்டர் பகுதியில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் நேற்று மாலை துப்பாக்கி ஏந்திய இளைஞர் ஒருவர் புகுந்து அங்குள்ள அனைவரையும் சிறைப்பிடித்தார். இது குறித்து தகவல் அறிந்து போலீசார் நிகழ்விடத்திற்குச் சென்றனர். அப்போது, போலீசார் இளைஞருடன் பேச்சுவார்த்தை நடத்தி, ஆயுதங்களை விட்டுவிட்டு சரணடையுமாறு கூறினர். எனினும் அதனை கேட்காத இளைஞர் திடீரென கண்மூடித்தனமாக சரமாரியாக துப்பாக்கியால் சுட்டார்.

இளைஞரின் துப்பாக்கிச் சூட்டில் காவல் அதிகாரி உள்ளிட்ட 10 பேர் சூப்பர் மார்க்கெட்டிலேயே உயிரிழந்துவிட்டனர். இதையடுத்து அதிரடியாக சூப்பர் மார்கெட்டுக்குள் நுழைந்த போலீசார் துப்பாக்கி முனையில் இளைஞரை மடக்கி பிடித்து சென்றனர். படுகாயத்துடன் 4 பேர் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகின்றனர். துப்பாக்கிசூடு நடத்தியதற்கான காரணம் குறித்து பிடிபட்ட இளைஞரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
newstm.in

