தொடரும் சோகம்.. ஆன்லைன் ரம்மியால் மேலும் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை !
தொடரும் சோகம்.. ஆன்லைன் ரம்மியால் மேலும் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை !

ஆன்லைன் விளையாட்டு வந்ததும் இளைஞர்கள், சிறுவர்களின் ஓடியாடும் பழக்கம் குறைந்துவிட்டது. இது பக்கம் இருந்தாலும், ஆன்லைன் சூதாட்டம் அதைவிட கொடுமை. தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக ஆன்லைன் சூதாட்டத்தில் பணம், நகைகளை பலர் இழந்து வரும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. இதில், சிலர் தற்கொலை செய்யும் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.
இந்த நிலையில், தற்போது ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்து கடனாளியான நபர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சென்னையில் அரங்கேறியுள்ளது. சென்னை கோயம்பேடு சீமாத்தமன் கோயில் தெருவை சேர்ந்தவர் தினேஷ். இவர் தனியாக பிரவுசிங் சென்டர் நடத்தி வந்தார். இவருக்கு மனைவி மற்றும் இரு குழந்தைகள் உள்ளனர்.

இதனால், அவருக்கு ஆன்லைன் சூதாட்ட பழக்கமும் ஏற்பட்டுள்ளது. நேற்றிரவு வீட்டின் ஹாலில் தினேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். காலை நீண்ட நேரமாகியும் அறையின் கதவை தினேஷ் திறக்காததால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் கதவை உடைத்து பார்த்தனர். அப்போது, அறையில் உள்ள பேனில் தினேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. கோயம்பேடு காவல்துறையினர் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தினர்.
விசாரணையில் தினேஷ் செல்போனில் ஆன்லைன் ரம்மி விளையாடும் பழக்கமுடையவர் என்பதும், கடன் வாங்கி ஆன்லைன் ரம்மியில் லட்சக்கணக்கில் இழந்ததால் மனமுடைந்து மதுப்பழக்கத்திற்கு அடிமையானதும் தெரியவந்தது. கடை வருமானம், சேமிப்பு பணம் என அனைத்தையும் இழந்துள்ளார். கடனை திருப்பி தர முடியாததால் தினேஷ் தற்கொலை செய்து கொண்டதும் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து தினேஷின் செல்போனை கைப்பற்றிய காவல்துறையினர், சைபர் ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அண்மையில், ஆன்லைன் ரம்மியால் ஏற்பட்ட கடன் தொல்லை காரணமாக கடந்த 2ஆம் தேதி சென்னை பெருங்குடியை சேர்ந்த வங்கி அதிகாரி மணிகண்டன் (36) தனது மனைவி பிரியா (35) மகன்கள் தரன் (10), தாஹன் (1) ஆகியோரை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட சோகமும் அதிர்ச்சியும் முழுமையாக குறைவதற்குள் தினேஷின் இந்த முடிவு பலரையும் அதிர்ச்சி அடையச்செய்துள்ளது.
newstm.in

