தமிழ்நாடு குறித்து சர்ச்சை ட்வீட்!! பாஜக ஆதரவு யூடியூபர் மாரிதாஸ் கைது!!
தமிழ்நாடு குறித்து சர்ச்சை ட்வீட்!! பாஜக ஆதரவு யூடியூபர் மாரிதாஸ் கைது!!

தமிழ்நாடு அரசியல் களம் பார்க்காத விமர்சனங்கள் இல்லை. சந்திக்காத அவதூறுகள் இல்லை. ஆனால் புரட்டுகளை பொய்யை மட்டுமே பேசுவதையே முழுநேரமாகக் கொண்ட அரசியல்வாதிகளை தமிழ்நாடு ஏற்றுக் கொண்டது இல்லை.
அண்மைக்காலமாக இத்தகைய அநாகரீகப் போக்கு அங்கிங்கெனாதபடி தமிழ்நாட்டில் தலைவிரித்தாடுகிறது. அதுவும் ஒரு வெள்ளை போர்டு வைத்துக் கொண்டு வாய்க்கு வந்ததையெல்லாம் ஏதோ அரிய கண்டுபிடிப்பு ரேஞ்சுக்கு பில்டப் கொடுத்து வந்த வலதுசாரிதான் மாரிதாஸ் என்கிற யூடியூபர்.
இவர் திமுக, பெரியாரிய இயக்கங்கள், இடதுசாரி இயக்கங்கள், ஊடகங்களை விமர்சித்துக் கடுமையான கருத்துகளை சமூக ஊடகங்களில் பதிவேற்றிவருகிறார். இவர் வெளியிட்ட வீடியோக்களும் கருத்துகளும் அரசியல் அரங்கில் பலமுறை சர்ச்சையைக் கிளப்பியிருக்கின்றன.
இந்தநிலையில், நாட்டின் முப்படைத் தளபதி நேற்றைய தினம் ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்த சூழலில், தமிழ்நாடு அரசின் சட்டம், ஒழுங்கை அவதூறு செய்யும் வகையில், காஷ்மீருடன் ஒப்பிட்டு மாரிதாஸ் பதிவிட்டிருக்கும் ட்வீட் பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.
மாரிதாஸின் இந்தக் கருத்துக்குக் கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், மதுரையைச் சேர்ந்த திமுக வழக்கறிஞர் ராமசுப்ரமணியன், ‘தமிழ்நாடு அரசு மீது அவதூறு பரப்பி பதற்றத்தை உருவாக்க நினைக்கும் மாரிதாஸ் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுங்கள்’ என்று மதுரை கமிஷனரிடம் புகார் செய்திருக்கிறார். அந்தப் புகாரின் அடிப்படையிலும், வேறு சில அவதூறு கருத்துகளை பதிவிட்ட புகாரின் பேரிலும் மாரிதாஸ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அதைத் தொடர்ந்து, இன்று மதியம் மதுரை அழகர் கோயில் சாலையிலிருக்கும் மாரிதாஸ் வீட்டுக்கு மாநகர காவல்துறை உதவி கமிஷனர் சூரக்குமார் தலைமையிலான காவல்துறையினர் கைதுசெய்யச் சென்றனர். இந்தத் தகவல் தெரிந்து பா.ஜ.க நிர்வாகிகளும் தொண்டர்களும் மாரிதாஸ் வீட்டுக்கு முன்பு கூடி கைதுசெய்யக் கூடாது என்று போராட்டம் நடத்தினார்கள்.
பாஜக மதுரை மாநகர் மாவட்டத் தலைவர் சரவணன் கூறியதாவது, “மாரிதாஸை போலீசார் அத்துமீறி கைது செய்துள்ளனர், எதற்காக கைது செய்தார்கள் என எந்த தகவலையும் போலீசார் தெரிவிக்கவில்லை” என கூறினார்.

