சர்ச்சை! குடியரசு தின அணிவகுப்பில் ஒரு மாநிலத்தின் வாகனத்திற்கு மட்டும் மறுப்பு!!
சர்ச்சை! குடியரசு தின அணிவகுப்பில் ஒரு மாநிலத்தின் வாகனத்திற்கு மட்டும் மறுப்பு!!

குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்க மேற்குவங்க மாநிலத்தின் அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தின்போது தலைநகர் டெல்லியில் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெறும். இதில் பல்வேறு மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் இடம்பெறும். மாநிலங்களின் கலாசாரம், பண்பாடு போன்றவற்றை பிரதிபலிக்கும் வகையில் ஊர்திகள் இருக்கும்.
இந்நிலையில், இந்த ஆண்டு அணிவகுப்பில் பங்கேற்க மேற்கு வங்க மாநிலத்தின் ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ளார்.

அதில், மத்திய அரசின் முடிவால் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். மத்திய அரசின் இந்த அணுகுமுறையால் மேற்கு வங்க மக்கள் அனைவரும் மிகவும் வேதனையடைந்துள்ளனர். மேற்கு வங்கத்தின் ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு எவ்வித காரணமும் தெரிவிக்காதது குழப்பம் அடைய செய்கிறது என குறிப்பிட்டுள்ளார்.
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் வங்கம் முன்னணியில் இருந்தது. நேதாஜி சுபாஸ் சந்திர போஸின் அர்ப்பணிப்பு மற்றும் அவரது ஐ.என்.ஏ.வின் 125வது ஆண்டு தொடர்பாக ஊர்தியில் குறிக்கப்பட்டுள்ளது. மேலும் ரவீந்திரநாத் தாகூர், ஸ்வாமி விவேகானந்தர், பிர்சா முண்டா மற்றும் பல தேசபக்தர்களின் உருவப்படங்களை ஊர்தி சுமந்து செல்கிறது.

மத்திய அரசின் அணுகுமுறை மேற்கு வங்க மக்களை மிகவும் வலி அடைய செய்துள்ளது. எனவே, மத்திய அரசு இதுகுறித்து மறுபரிசீலனை செய்து குடியரசு தினவிழாவில் மேற்கு வங்காள அலங்கார ஊர்திக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.
newstm.in

