இந்தியாவில் கொரோனா 2ஆவது அலை இன்னும் முடியவில்லை... மத்திய அரசு எச்சரிக்கை !
இந்தியாவில் கொரோனா 2ஆவது அலை இன்னும் முடியவில்லை... மத்திய அரசு எச்சரிக்கை !

மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, உலகம் முழுவதும் அதிக எண்ணிக்கையில் கொரோனா பாதிப்பு பதிவாகி வருகிறது. இந்தியாவை பொருத்தவரையில் 2ஆவது அலை பரவல் இன்னும் ஓயவில்லை. தொடர்ந்து கொரோனா பாதிப்பை கண்காணித்து வருகிறோம்.

4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் உள்ளனர். அனைவரையும் கருத்தில் கொள்ள வேண்டும். கேரளாவில் மட்டும்தான் கொரோனாவுக்கு அதிக அளவில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர். தேசிய அளவில் அதிகமான நபர்கள் சிகிச்சை பெறும் மாநிலங்களில் தமிழகம் 5-வது இடத்தில் உள்ளது. தமிழகம், புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா அதிகரிக்கிறது. குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி தொடர்பாக இறுதி முடிவுக்கு காத்திருக்கிறோம்.
ஜூன் 1ஆம் தேதி 279 மாவட்டங்களில் 100-க்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் பாதிப்பு பதிவானது. தற்போது மாவட்டங்களின் எண்ணிக்கை 57 என்ற அளவுக்கு குறைந்துள்ளது. கேரளாவில் 10 மாவட்டங்கள் உள்பட மொத்தம் 18 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கிறது.

இந்த 18 மாவட்டங்களில் 47.5 சதவீதம் பாதிப்புகள் பதிவாகின்றன. நாடு முழுவதும் 44 மாவட்டங்களில் பாதிப்பு விகிதம் 10 சதவீதத்திற்கும் மேல் உள்ளது. கேரளா, மணிப்பூர், மிசோரம், நாகலாந்து உள்ளிட்ட மாநிலங்களில் இந்த மாவட்டங்கள் அடங்கியுள்ளன என்றும் அவர் கூறினார்.

