கொரோனாவா? டெங்குவா? - போட்டிப்போட்டு வேகமாக பரவுவதால் மக்கள் அதிர்ச்சி
கொரோனாவா? டெங்குவா? - போட்டிப்போட்டு வேகமாக பரவுவதால் மக்கள் அதிர்ச்சி

தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில் கடந்த ஒரு வாரக்காலமாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. சிறிது சிறிதாக அதிகரித்த தினசரி கொரோனா பாதிப்பு தற்போது திடீரென ஒரேஅடியாக உயர்ந்து நேற்று 4,862 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் தமிழக அரசும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இந்த நிலையில் கொரோனாவுக்கு மத்தியில், கோவையில் டெங்கு காய்ச்சலும் வேகமாக பரவி வருவதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கோவையில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து 2 நாட்களாக 100-ஐ கடந்து பதிவாகி வருகிறது. அதே வேளையில் டெங்கு பாதிப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மட்டுமின்றி திருப்பூர், ஈரோடு என அண்டை மாவட்டங்களிலும் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் கோவை அரசு மருத்துவமனையில் டெங்குவால் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 42 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 32 பேர் குழந்தைகள். டெங்குவை தடுக்க வீட்டின் அருகில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்வது, காய்ச்சல் அறிகுறி தென்பட்டவுடன் மருத்துவரை அணுகுவது என கவனத்துடன் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
கோவையில் 31 பேர், ஈரோடு 4 பேர், திருப்பூர் 5 பேர், திண்டுக்கல், பாலக்காட்டில் தலா ஒருவர் என கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதேநேரத்தில், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் டெங்கு பாதிக்கப்பட்ட நபர்கள் குறித்து கண்காணிக்கப்படுவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும் டெங்கு பரவல் காணப்படும் பகுதிகளில் கொசு ஒழிப்பு நடவடிக்கை மற்றும் மருத்துவ முகாம் அமைக்கும் நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
newstm.in

