ஒரே பள்ளியில் 27 மாணவர்களுக்கு கொரோனா.. மேலும் 150 பேர் முடிவுக்காக காத்திருக்கும் மருத்துவத்துறை !!
ஒரே பள்ளியில் 27 மாணவர்களுக்கு கொரோனா.. மேலும் 150 பேர் முடிவுக்காக காத்திருக்கும் மருத்துவத்துறை !!

தனியார் பள்ளி மாணவர்கள் 27 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது பெற்றோரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
கொரோனா மூன்றாவது அலையுடன், உருமாறி வைரசான ஒமைக்ரானும் தற்போது தமிழகத்தை மிரட்டி வருகிறது. இதில் தற்போது தலைநகர் சென்னையில் தான் பாதிப்பு அதிகளவில் உள்ளது. கொரோனா பரவும் விகிதமும் அதிகரித்து வருகிறது. இதனால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை குரோம்பேட்டையில் உள்ள எம்ஐடி வளாக விடுதி மாணவர்கள் 100க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், கொடுங்கையூர் பகுதியில் இயங்கிவரும் பிரபல தனியார் பள்ளி மாணவர்கள் 27 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது மாணவர்கள், பெற்றோர் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொடுங்கையூர், மறைமலை அடிகளார் சாலையில் இயங்கி வரும் செயின்ட் ஜோசப் பள்ளியில் படிக்கும் பிளஸ்11 மாணவி ஒருவருக்கு சில நாட்களுக்கு முன் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து மாணவி படிக்கும் வகுப்பில் உள்ள பிற 60 மாணவர்களுக்கும் மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகள் நேற்று கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர்.
இதில் மொத்தம் 27 மாணவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் அவர்களுக்கு கொரோனா அறிகுறிகள் எதுவும் இல்லாததால் அனைவரும் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என சென்னை மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.. 27 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதையடுத்து, இப்பள்ளியில் பயிலும் 150-க்கும் மேற்பட்ட மாணவர்தளுக்கு சென்னை மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகள் கொரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளனர். இதன் முடிவு இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்தடுத்து பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களுக்கு கொரோனா உறுதியாவதால், பெற்றோரும் மாணவர்களும் அச்சமடைந்துள்ளனர்.
newstm.in

