மத்திய சிறைச்சாலையில் 41 கைதிகளுக்கு கொரோனா!! வார்டன்களும் தப்பவில்லை!
மத்திய சிறைச்சாலையில் 41 கைதிகளுக்கு கொரோனா!! வார்டன்களும் தப்பவில்லை!

கொரோனா இரண்டாம் அலை பரவல் தீவிரமாக உள்ளது. வைரஸ் சாமான்யர் முதல் விவிஐபி வரை அனைவரையும் பாரபட்சமின்றி பதம் பார்த்து வருகிறது. அரசியல் கட்சி தலைவர்கள், அமைச்சர்கள், திரைநட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் என பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அந்த வகையில் கொரோனா வைரஸ் சிறைக் கைதிகளையும் விட்டுவைக்கவில்லை. தற்போது புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறைச்சாலையில் 41 கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அனைவரும் தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சில நாட்களுக்கு முன்பு தண்டனைக் கைதி ஒருவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதை அடுத்து, வார்டன் அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். இருவரும் சிறைக்கு வந்த 2 நாட்களில், லேசான காய்ச்சல், உடல் வலி ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து மற்ற கைதிகளுக்கும் அறிகுறிகள் தென்பட்டுள்ளன. இதையடுத்து சிறை வளாகத்தில் 200 பேருக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதில் சிறை துணைக் கண்காணிப்பாளர், வார்டன்கள் இருவர், 41 தண்டனைக் கைதிகளுக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. கைதிகள் தப்பியோடக் கூடாது என்பதற்காக மருத்துவமனையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

