மீண்டும் அதிகரிக்கும் கொரோனா! சுகாதாரத்துறை கவலை!
மீண்டும் அதிகரிக்கும் கொரோனா! சுகாதாரத்துறை கவலை!

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு முறைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த போதிலும் பாதிப்பு சில நாட்களாக தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. அதிலும் சென்னை கோவையில் அதிதீவிரமாக பரவி வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று ஒரே நாளில் 359 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதனையடுத்து பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் மாநகராட்சி பகுதியில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் விடுத்த செய்திக்குறிப்பில் கோவை மாநகராட்சியில் தொடர்ந்து குடும்பம் குடும்பமாக கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதற்கு காரணம் ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு தொற்றுக்கான அறிகுறி தென்பட்ட உடனேயே மருத்துவமனைக்கு வருவதில்லை. இதனால் அந்த குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் தொற்று உறுதியான பிறகு தான் மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெறுகிறார்கள். இந்த நிலை மாற வேண்டும். ஒருவருக்கு அறிகுறி ஏற்பட்டால் அவர் உடனே பரிசோதனை செய்து கொண்டு சிகிச்சை பெறுவதின் மூலம் நோய் பரவுவதை தடுக்க முடியும்.

மேலும் பொது இடங்களுக்கு வருபவர்கள் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். ஒருவருக்கு கொரோனா தொற்றுக்கான அறிகுறி இருந்தால் அவருக்கு நோய் எதிர்ப்பு இருந்தால் அவருக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. ஆனால் அவர் முகக்கவசம் அணியாவிட்டாலோ அல்லது பக்கத்தில் இருப்பவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால் அவருக்கு நோய் பரவ வாய்ப்புள்ளது. எனவே முகக்கவசம் அணிவதின் முக்கிய நோக்கமே மற்றவர்களுக்கு நோய் பரவுவதை தடுக்கவும், மற்றவர்கள் மூலம் நமக்கு தொற்று வராமலும் தடுப்பது தான். கோவை மாநகரில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிப்பதின் மூலம் தொற்றை கட்டுப்படுத்த முடியும் என அம்மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

