ஒரு பக்கம் அதிகரிக்கும் கொரோனா.. மறுபக்கம் மழை வெள்ளம்.. தவிக்கும் கேரளா !!
ஒரு பக்கம் அதிகரிக்கும் கொரோனா.. மறுபக்கம் மழை வெள்ளம்.. தவிக்கும் கேரளா !!

மழை வெள்ளத்தில் மிதக்கும் கேரளாவில் புதிதாக 11,150 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கேரளாவில் கடந்த 14ஆம் தேதி முதல் தினசரி பாதிப்பு 10 ஆயிரத்துக்குக் கீழ் பதிவாகி வந்தது. இதனால் அந்த மாநில மக்கள் நிம்மதி அடைந்து வந்தனர். இந்த நிலையில் மீண்டும் இன்று (புதன்கிழமை ) 11,150 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 48,70,584 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 82 பேர் பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 27,084 ஆக உயர்ந்துள்ளது. 8,592 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 47,69,373 பேர் குணமடைந்துள்ளனர்.
இன்றைய கேரளாவில் நிலவரப்படி 82,738 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சைப் பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 94,151 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் 41 பேர் வெளிமாநிலங்களிலிருந்து வந்தவர்கள். 348 பேருக்கு எவ்வாறு நோய்த் தொற்று ஏற்பட்டது என்பது இன்னும் கண்டறியப்படவில்லை.

இந்தியாவில் ஒரு கட்டத்தில் கேரளாவில் மட்டுமே அதிகப்படியான தினசரி கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் கேரள அரசு மீது கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இந்த நிலையில் தற்போது குறைந்துவந்த கொரோனா மீண்டும் உயர்ந்துள்ளது. இதனிடையே கேரளாவில் தொடர்ந்து பெய்த மழையால் பல இடங்களில் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதுவரை 42 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
newstm.in

