அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி திருட்டு !
அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி திருட்டு !

நாடு முழுவதும் கொரோனா கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் நிலையில், மற்றொரு புறம் கொரோனா தடுப்பூசி போடும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. அவசர தேவைக்காக வெளிநாட்டு தடுப்பூசிகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் அரசு மருத்துவமனையில் இருந்து 320 டோஸ் கோவாக்சின் தடுப்பு மருந்து திருடப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்வாடியா அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இங்கு பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த கோவேக்சின் தடுப்பூசி தொகுப்பில் இருந்து 32 குப்பிகள் மாயமாகி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
ஒரு குப்பியில் 10 டோஸ் வீதம் மொத்தம் 320 டோஸ்களை யாரோ மர்ம நபர்கள் திருடிச்சென்றுள்ளனர். இது மாநில சுகாதாரத்துறை வட்டாரத்தில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் இருந்து போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக துறை சார்ந்த விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது. தடுப்பூசி பாதுகாப்பு விவகாரத்தில் அலட்சியமாக இருந்ததாக மாநில காங்கிரஸ் அரசுக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.
மேலும் போலீசார் ஒரு புறம் விசாரணையை தொடங்கியுள்ள நிலையில் துறை ரீதியான விசாரணையும் தொடங்கப்பட்டுள்ளது.
newstm.in

