உங்கள் கையில் இருப்பது கள்ள நோட்டா, நல்ல நோட்டா..?: கண்டறிவது எப்படி..?
உங்கள் கையில் இருப்பது கள்ள நோட்டா, நல்ல நோட்டா..?: கண்டறிவது எப்படி..?

மக்களில் பலருக்கு தங்கள் கையில் இருக்கும் 500 ரூபாய் நோட்டு உண்மையானதா அல்லது போலியானதா என்பதை கண்டுபிடிக்க தெரியாததால், பல நேரங்களில் நஷ்டத்தைச் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும்.
ஆனால், இனிமேல் நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. ஏனெனில், உண்மையான ரூபாய் நோட்டுக்கான சரிபார்ப்பு பட்டியலை இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) சமீபத்தில் வெளியிட்டுள்ளது. அதன் அடிப்படையில், போலி நோட்டுகளை நீங்கள் ஈசியாக கண்டறியலாம்.

வாருங்கள், 500 ரூபாய் நோட்டு உண்மையானதா அல்லது போலியானதா என்பதை எப்படி சரி பார்க்கலாம் என்று பார்ப்போம்.
* ரூபாய் நோட்டை 45 டிகிரி கோணத்தில் கண் முன் வைத்தால், 500 என்று எழுதப்பட்டு இருப்பதை பார்க்கலாம்.
* தேவநாகரி எழுத்தில் 500 என்று எழுதப்பட்டு இருப்பதையும் பார்க்கலாம்.
* வலதுபுறம் மையத்தில் மகாத்மா காந்தியின் படம் இடம்பெற்றிருக்கும்.
* நோட்டை லேசாக வளைத்தால், பாதுகாப்பு நூலின் நிறம் பச்சை நிறத்தில் இருந்து இண்டிகோவாக மாறும்.
* கவர்னரின் கையெழுத்து, உத்தரவாதப் பிரிவு, வாக்குறுதி விதி மற்றும் ஆர்பிஐ லோகோ போன்றவை இப்போது வலது பக்கமாக மாற்றப்பட்டுள்ளது.
* மகாத்மா காந்தியின் படம் மற்றும் எலெக்ட்ரோ டைப் வாட்டர்மார்க் ஆகியவையும் தெரியும்.
* மேல் இடது பக்கம் மற்றும் கீழ் வலது பக்கம் உள்ள எண்கள் இடமிருந்து வலமாக அதிகரிக்கும்.
* நோட்டில் எழுதப்பட்ட 500 என்ற எண்ணின் நிறம் பச்சை நிறத்தில் இருந்து நீலமாக மாறுகிறது.
* நோட்டின் வலது பக்கத்தில் அசோக தூண் இருக்கும்.
* வலது பக்க வட்டப் பெட்டியில் 500 என்று எழுதப்பட்டிருக்கும்.
* நோட்டு அச்சிடப்பட்ட ஆண்டை நீங்கள் சரிபார்க்கலாம்.
* ஸ்வச் பாரத் லோகோ வாசகத்துடன் அச்சிடப்பட்டுள்ளது.
* ரூபாய் நோட்டின் மையத்தில் மொழி பட்டியல் இருக்கும்.
* இந்தியக் கொடியுடன் செங்கோட்டையின் படம் அச்சிடப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கியின் சமீபத்திய அறிக்கையின்படி, 2020 மற்றும் 2021-ம் ஆண்டுகளில் 5.45 கோடி ரூபாய் மதிப்புள்ள போலி நோட்டுகள் புழக்கத்தில் இருந்துள்ளன. அவற்றில், 2,08,625 போலி நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

