திமுக எம்.எல்.ஏவிடம் மிரட்டி பணம் பறிக்க முயற்சி.. தம்பதி கைது !!
திமுக எம்.எல்.ஏவிடம் மிரட்டி பணம் பறிக்க முயற்சி.. தம்பதி கைது !!

உள்துறை டி.எஸ்.பி எனக்கூறி திமுக எம்எல்ஏவிடம் பணம் பறிக்க முயன்ற தம்பதியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருத்தணி சட்டமன்ற உறுப்பினராக திமுகவைச் சேர்ந்த எஸ்.சந்திரன் உள்ளார். இவரை, தொலைபேசியில் அழைத்த ஒருவர், தான் தலைமைச் செயலகத்தில் உள்துறை டிஎஸ்பியாக இருப்பதாகவும், திருத்தணி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மீது புகார் வந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இந்த புகார் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்காமல் 25 லட்ச ரூபாய் பணம் அளிக்க வேண்டும் என மிரட்டியுள்ளார்.
இதனால் எம்எல்ஏ சந்திரன் மிரண்டுபோனார். தொடர்ந்து பேசிய அந்நபர், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மீதும் புகார்கள் வந்ததாகவும், ஆனால் நடவடிக்கை எடுக்காமல் இருக்க அவர் 25 லட்சம் ரூபாய் கொடுக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். பின்னர் தொலைபேசி இணைப்பை துண்டித்துவிட்டார்.

ஆனால், தன்னை மிரட்டி பணம் பறிக்கும் நோக்கில் ஒரு கும்பல் இவ்வாறு திட்டமிடுவதாக எம்எல்ஏ சந்திரன் சந்தேகமடைந்தார். பின்னர் இது குறித்து திருவள்ளூர் காவல் கண்காணிப்பாளர் வருண்குமாரிடம் புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து, தொலைபேசியில் பணம் கேட்டு மிரட்டியவர்களை பிடிக்க காவல்துறையினர் திட்டமிட்டனர். அதன்படி, மீண்டும் தொலைபேசியில் பேசியப்போது பணத்தை கொடுப்பதாக எம்எல்ஏ சந்திரன் ஒப்புக்கொண்டுள்ளார். அதன்படி குறிப்பிட்ட இடத்தில் வைத்து பணத்தை தருவதாகவும் கூறியுள்ளார். பணத்திற்கு அடியில் வெள்ளை தாள்களை வைத்து, எம்.எல்.ஏவின் உதவியாளர் பணத்தை கொடுக்கச் சென்றுள்ளார். அப்போது, பணத்தை வாங்க வந்தவரை காவல்துறையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

விசாரணையில் அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் என்பவர், தனது மனைவி யசோதாவுடன் சேர்ந்து மோசடியில் ஈடுபட்டது அம்பலமானது. தலைமைச் செயலகத்தில் டி.எஸ்.பி.ஆக இருப்பது போன்ற போலி அடையாள அட்டை மற்றும் பத்தாயிரம் ரூபாய், கார் உள்ளிட்டவற்றை கைதானவர்களிடமிருந்து, பறிமுதல் செய்தனர். பின்னர் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.
newstm.in

