சம்மந்தி திட்டியதால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்ட தம்பதி..!
மனைவியுடன் சிறு தகராறு.. சம்மந்தி திட்டியதால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்ட தம்பதி..!

சம்மந்தி திட்டியதால் 3 பக்கத்திற்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு கணவன், மனைவி இருவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கழனிவாசல் பகுதியில் ராசு - தமிழரசி தம்பதியர் வசித்து வந்தனர். இவர்களின் இளைய மகன் முகேஷ்வர்மன் திருமாணமாகி மனைவி அர்ச்சனாவுடன் மானகிரியில் தனியாக வீடு எடுத்து வசித்து வந்தார். இந்நிலையில், முகேஷ்வர்மாவுக்கும், அர்ச்சனாவுக்கும் இடையில் சிறிய சண்டை ஏற்பட, அர்ச்சனா மேலூரில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.
அங்கு சென்ற அர்ச்சனா, சண்டை குறித்து தன் பெற்றோரிடம் கூறியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, நேற்று முன்தினம் ராசுவை செல்போனில் தொடர்பு கொண்ட, அர்ச்சனாவின் பெற்றோர் அவரது மகன் முகேஷ்வர்மா குறித்தும் அவர்களையும் கடுமையான வார்த்தைகளால் திட்டியுள்ளனர். இதனால் மனமுடைந்த ராசுவும் அவரது மனைவியும் தனது மகனுக்கு நல்ல இடத்தில் பெண் பார்த்து திருமணம் செய்து வைக்கவில்லையோ என்ற வருத்தத்தில், மூன்று பக்கத்திற்கு கடிதங்கள் எழுதி வைத்துவிட்டு வீட்டில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டனர்.
விவரமறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், இருவரது உடலையும் கைப்பற்றி உடல் கூறு ஆய்வுக்காக காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு, வழக்குப்பதிவு செய்து தற்கொலை சம்பவம் தொடர்பாக விசாரணை செய்து வருகின்றனர். தற்கொலைக்கு காரணமாக கூறப்படும் சம்மந்தி குடும்பத்தினரிடமும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
newstm.in



