டெல்டா வகை கொரோனா.. உலக சுகாதார அமைப்பு மீண்டும் கடும் எச்சரிக்கை !!
டெல்டா வகை கொரோனா.. உலக சுகாதார அமைப்பு மீண்டும் கடும் எச்சரிக்கை !!

டெல்டா வகை கொரோனா வைரஸ் வரும் மாதங்களில் 90க்கும் அதிகமான நாடுகளில் ஆதிக்கம் செலுத்தும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
உலக நாடுகள் கொரோனாவால் ஓராண்டுக்கு மேலாக பெரும் பாதிப்புகளை சந்தித்து வருகின்றன. நடப்பு ஆண்டிலும் இதன் தீவிரம் பல நாடுகளில் ஏற்பட்டது. தற்போது பல நாடுகளில் கொரோனாவின் உருமாறிய வகையால் பாதிப்புகள் அதிகரித்து வருவது கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அவை ஆல்பா, பீட்டா, காமா மற்றும் டெல்டா என வகைப்படுத்தப்பட்டு உள்ளன.

இதில் 172 நாடுகளில் ஆல்பா வகை கொரோனா பாதிப்புகளாலும், 120 நாடுகளில் பீட்டா வகை கொரோனா பாதிப்புகளாலும், 72 நாடுகளில் காமா வகை கொரோனா பாதிப்புகளாலும் மக்கள் பெருமளவில் அவதிப்பட்டு வருகின்றனர். இதேபோன்று, 96 நாடுகளில் டெல்டா வகை கொரோனா பாதிப்புகள் உள்ளன என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் இது குறித்து உலக சுகாதார அமைப்பு விடுத்துள்ள எச்சரிக்கை மேலும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது டெல்டா வகை தொற்று பாதிப்பு கடந்த வாரத்தை விட 11 நாடுகளில் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த 96 நாடுகளில் வரும் மாதங்களில் டெல்டா வகை கொரோனா வைரஸ் ஆதிக்கம் செலுத்தும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளது. வேகமாக பரவி மனித உடலில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியது டெல்டா வகை வைரஸ் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. தமிழகம் உள்பட பல மாநிலங்களில் டெல்டா வகை தொற்று கண்டறியப்பட்டுள்ளது கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in

