கோவில்களை இடிக்க தடை.. உயர்நீதிமன்றம் உத்தரவு..!
கோவில்களை இடிக்க தடை.. உயர்நீதிமன்றம் உத்தரவு..!

திருப்பூர் மாவட்டம் பள்ளபாளையத்தில் உள்ள கருப்பராய சுவாமி கோவில் மற்றும் வடுகபாளையத்தில் உள்ள கருவந்தராய சுவாமி கோவில் ஆகிய இரண்டும் நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாகக் கூறி, இரண்டு கோவில்களையும் இடிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது.
ஆனால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பள்ளபாளையத்தைச் சேர்ந்த கோபிநாதன் என்பவரும், வடுகபாளையத்தைச் சேர்ந்த கிருஷ்ணசாமி என்பவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதிகள் ராஜா மற்றும் சவுந்தர் ஆகியோர் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், ‘நூற்றாண்டு பழமையான கோவில்கள் வருவாய் துறை ஆவணங்களில் இடம்பெறுவதில்லை.
நீர்நிலைகளை ஆக்கிரமித்து கோவில் கட்டப்பட்டதாக கூறப்படுவதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை. எனவே, இந்த கோவில்களை இடிக்க கூடாது’ என வாதிட்டனர்.
மனுதாரரின் கருத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், நூற்றாண்டு பழமையான இந்த இரண்டு கோவில்களையும் இடிப்பதற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளனர். மேலும், இந்த மனுவுக்கு அரசு தரப்பு பதில் அளிக்கவும் உத்தரவிட்டு விசாரணையை நான்கு வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்.

