மத்திய அரசின் உயர் பதவிக்கு நேரடி நியமனம் ! தலைவர்கள் கண்டனம் !!
மத்திய அரசின் உயர் பதவிக்கு நேரடி நியமனம் ! தலைவர்கள் கண்டனம் !!

மத்திய அரசின் வேளாண்மைத்துறை அமைச்சகம், சட்டம் மற்றும் நீதித்துறை, பள்ளிக் கல்வித்துறை, உணவு மற்றும் பொது வழங்கல் துறை, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை, தரைவழிப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை, நீர்வளத் துறை, விமானப் போக்குவரத்துத் துறைகளில் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நேரடி நியமனத்திற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
மத்திய அரசின் பணியாளர் மற்றும் பயிற்சித்துறை சார்பில், கடந்த 5 -ம் தேதி மத்திய பொதுப் பணித் தேர்வு ஆணையம் ஒரு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதில், மத்திய அரசின் வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம், வருவாய்த்துறை மற்றும் மத்திய நிதித்துறை, வேளாண்மைத்துறை அமைச்சகம், சட்டம் மற்றும் நீதித்துறை, பள்ளிக் கல்வித்துறை, உணவு மற்றும் பொது வழங்கல் துறை, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை, தரைவழிப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை, நீர்வளத் துறை, விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகங்களில் இணைச் செயலாளர்கள் மற்றும் இயக்குநர்களாக தனியார் துறையில் இருந்து தேர்வு செய்யப்படுபவர்கள் என்று மத்திய அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மேற்கண்ட துறைகளில் இணைச் செயலாளர்கள் மற்றும் இயக்குநர்கள் பதவிக்கு, தனியார் நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும், மூன்று இணைச் செயலாளர்கள் மற்றும் 27 இயக்குநர் பதவிகளுக்கு முறையே 15 வருடங்கள் மற்றும் 10 வருடங்கள் பணியாற்றிய பயிற்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், பொதுப்பணித் தேர்வு ஆணையத்தின் மூலம் மத்திய அரசுப் பணிகள் மற்றும் மாநில அரசுப் பணிகளின் நிர்வாகப் பொறுப்புகளில் முக்கியப் பணியிடங்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்ந்து எடுக்கப்பட வேண்டும் என்பது அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 315-ன்படி விதி சொல்கிறது. அதன்படிதான், இந்திய ஆட்சிப் பணி, இந்திய காவல் பணி, இந்திய வருவாய் பணி போன்ற முதன்மைப் பணிகளுக்கு அந்தந்தத் தேர்வு ஆணையங்கள் மூலம் தேர்வு நடத்தியும், பயிற்சி அளித்தும், மத்திய அரசுப் பணிகளுக்குச் சேர்க்கப்படுவது வழக்கம்.
இதில், இடஒதுக்கீடு அளித்து, சமூக நீதி பின்பற்றப்படுகின்றது. இதனால், மத்திய அரசின் இணைச் செயலாளர்கள், துணைச் செயலாளர்கள், செயலகப் பணி இடங்களில், பட்டியல் மற்றும் பழங்குடி இனத்தவர்களுக்கு 23 விழுக்காடு, பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மத்திய பாஜக அரசு, சமூக நீதிக்கு முடிவு கட்டும் வகையில் செயல்பட்டு வருகிறது. மத்திய அரசின் ஆளுமைிக்க பொறுப்புகளில் ஆர்எஸ்எஸ் மற்றும் சங் பரிவாரங்களின் ஆதரவாளர்கள், சிந்தனையாளர்கள சேர்ந்தவர்களை, குறுக்கு வழியில் நியமனம் செய்ய பாஜக அரசு முயற்சி செய்து வருகிறது.
தனியார் நிறுவனங்களில் பணியாற்றிய நபர்களை மத்திய அரசுப் பணிகளில் நேரடியாக நியமனம் செய்யும் ஆபத்தான போக்குக்குக் கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கின்றேன். இதனை எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாது. ஏற்றுக்கொள்ளவும் முடியாது என்றும், எனவே, இந்த அறிவிப்பை உடனே ரத்து செய்ய வேண்டும் என வைகோ தெரிவித்துள்ளார்.

