திமுக - பாமக பிரமுகர்கள் மோதல்.. காவல்நிலையம் முற்றுகை..!
திமுக - பாமக பிரமுகர்கள் மோதல்.. காவல்நிலையம் முற்றுகை..!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள இறையனூரைச் சேர்ந்தவர் கோபி செல்வம் (28). பாமக பிரமுகரான இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த திமுக கிளைச் செயலாளரான பச்சையப்பன் (35) என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில், இருவரும் மாறி மாறி தாக்கிக் கொண்டனர்.
இதுகுறித்து கிளியனூர் காவல்நிலையத்தில் பச்சையப்பன் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் கோபி செல்வம் உட்பட 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த கோபி செல்வம், பாமக நிர்வாகிகளுடன் கிளியனூர் காவல்நிலையத்தை திடீரென முற்றுகையிட்டார். அப்போது அவர்கள் திமுக கிளைச் செயலாளர் பச்சையப்பன் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கக்கோரி கோஷங்களை எழுப்பினர்.
இதையடுத்து அவர்களிடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலுமணி பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பச்சையப்பன் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளிக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட பாமகவினர் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதைத்தொடர்ந்து, பச்சையப்பன் உட்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

