திமுக அமைச்சரின் சகோதரரிடம் இருந்து கட்சிப்பதவி பறிப்பு.. துரைமுருகன் அறிவிப்பு !!
திமுக அமைச்சரின் சகோதரரிடம் இருந்து கட்சிப்பதவி பறிப்பு.. துரைமுருகன் அறிவிப்பு !!

திராவிட முன்னேற்றக் கழகத்தின் கட்சிப் பொறுப்பிலிருந்து திருவொற்றியூர் சட்டப்பேரவை உறுப்பினர் நீக்கப்படுவதாக கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதால், திருவொற்றியூர் மேற்குப் பகுதி செயலாளர் பொறுப்பிலிருந்து கே.பி. சங்கர் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவொற்றியூர் தொகுதியிலிருந்து முதல்முறையாக சட்டப்பேரவைக்கு தேர்வாகியுள்ள இவர், முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் கே.பி.பி.சாமியின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது. திருவொற்றியூர் தொகுதியில் தான் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் போட்டியிட்டார். எனினும் அவரை வீழ்த்தி கே.பி.பி.சங்கர் சட்டப்பேரவைக்கு தேர்வானார்.

திருவொற்றியூர் திமுக எம்எல்ஏ திடீரென கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளதால் அவரது ஆதரவாளர்களுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனினும் கே.பி.பி.சங்கர் எதற்காக நீக்கப்பட்டார் என்பது குறித்த முழு தகவலையும் திமுக தலைமை தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, கே.பி.பி.சங்கர் மீது அண்மையில் புகார் ஒன்று எழுந்தது. அதாவது, மாநகராட்சி உதவி பொறியாளரை தாக்கியதாக திமுக எம்.எல்.ஏ கே.பி.சங்கர் மீது பரபரப்பு புகார் எழுந்தது. இதுபற்றி கட்சி தலைமைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்தே ஆக்ஷனில் இறங்கிய திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளார் என கட்சி வட்டாரம் தெரிவிக்கிறது.

திமுகவின் மீனவர் அணி செயலாளராக இருந்து வந்த கே.பி.பி. சாமி 2006-2011-ல் தமிழக மீன்வளத்துறை அமைச்சராகவும் பணியாற்றினார். இதனையடுத்து, உடல்நலக்குறைவால் கே.பி.பி.சாமி உயிரிழந்தார். பின்னர், நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் கே.பி.பி. சாமியின் சகோதரரான கே.பி.சங்கருக்கு முதல்முறையாக திருவொற்றியூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. அதில் வெற்றியும் கண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
newstm.in

