எங்களை சீண்டாதீர்கள்.. காவல்துறைக்கு பகிரங்கமாக சவால் விடுத்த எஸ்.பி.வேலுமணி !!
எங்களை சீண்டாதீர்கள்.. காவல்துறைக்கு பகிரங்கமாக சவால் விடுத்த எஸ்.பி.வேலுமணி !!

காவல்துறையினர் தொடர்ந்து பொய் வழக்கு போடுவதாகவும், நடுநிலையோடு நடந்து கொள்ள வேண்டும் என்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியுள்ளார்.
நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் பிப்ரவரியில் நடக்க உள்ளதாகவும் விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தயாராகி வருகின்றனர். அந்த வகையில், கோவை மாவட்ட அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் இன்று அக்கட்சியின் மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கோவை மாவட்ட அதிமுக எம்.எல்.ஏ,.க்கள் 9 பேரும் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, 7 மாத ஆட்சியில் மக்களுக்கு எந்த திட்டமும் செய்யாத திமுக அரசை கண்டித்து 9 ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகின்றது எனவும் திமுக ஆட்சிக்கு வந்து 7 மாதத்தில் எதுவும் செய்யவில்லை. வெறும் விளம்பரத்தில் இந்த ஆட்சி ஓடுகின்றது என தெரிவித்தார். தமிழக முதல்வர் அனைத்திற்கும் எங்கள் மீது பழி போடுகின்றார் என தெரிவித்த அவர், அதிமுக குறித்துதான் பத்திரிகைகள், ஊடகங்கள் விவாதம் நடத்துகின்றனர் என கூறிய அவர், தற்கொலை செய்து கொண்ட அரசு ஊழியர் குறித்து ஊடகங்கள் ஏன் விவாதம் நடத்தவில்லை என கேள்வி எழுப்பினார்.

50 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சியை கடந்த ஆட்சியில் கொடுத்தோம். ஆனால் இந்த அரசு கோவையில் 300 சாலை பணிகளை ரத்து செய்து இருக்கின்றனர் என தெரிவித்த அவர், கோவையில் நடக்கும் ஆர்ப்பாட்டத்திற்கு ஒவ்வொரு டிவிசனில் இருந்தும் 200 பேர் அழைத்து வர வேண்டும் எனவும், ஒரு லட்சம் பேர் திரண்டு கோவையில் நடத்தும் போராட்டத்தால், கோவையில் நிறுத்தப்பட்ட திட்டங்களை அரசு செயல்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.
தமிழகத்திலேயே மிகப்பெரிய கூட்டம் கோவை கூட்டமாக இருக்க வேண்டும், நம் கூட்டத்தை பார்த்து கோட்டையே நடுங்க வேண்டும். காவல் துறை வழக்கு போட்டால் எதிர்வினையாற்ற தயார் என்ற எச்சரிக்கையினை கோவை காவல் துறைக்கு வைக்கின்றோம். காவல் துறை நம்மை தடுத்தால் அதை பார்த்துக்கலாம், காவல் துறை தேவையில்லாமல் எங்களை சீண்டாதீர்கள் என்றார்.
newstm.in

