அனைத்துக்கட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்னென்ன தெரியுமா..?
அனைத்துக்கட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்னென்ன தெரியுமா..?

மேகதாது விவகாரம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் 3 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டும் முயற்சியில் கர்நாடக அரசு ஈடுபட்டு வருகிறது. இதற்கு, தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. கட்டாயம் அணை கட்டப்படும் என கர்நாடக முதல்வர் எடியூரப்பா கூறியுள்ள நிலையில், தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் டில்லி சென்று மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்து, ‘மேகதாது அணைக்கு அனுமதி வழங்கக்கூடாது’ என்று வலியுறுத்தினார்.
இந்நிலையில், மேகதாது அணை விவகாரம் தொடர்பாக விவாதிக்க அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்திருந்தார். அதன்படி காலை 10.30 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் கூட்டம் நடைபெற்றது.
இதில் திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி, டி.ஆர்.பாலு, அதிமுக சார்பில் ஜெயக்குமார், மனோஜ் பாண்டியன், காங்கிரஸ் சார்பில் கே.எஸ்.அழகிரி, செல்வப்பெருந்தகை, விசிக சார்பில் திருமாவளவன், ரவிக்குமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கே. பாலகிருஷ்ணன், பாஜக சார்பில் நயினார் நாகேந்திரன், வி.பி.துரைசாமி, தமிழக வாழ்வுரிமை கட்சி வேல்முருகன், கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி ஈஸ்வரன், புரட்சி பாரதம் பூவை ஜெகன்மூர்த்தி உள்ளிட்ட, தமிழக சட்டப்பேரவையில் உள்ள 13 கட்சிகளின் உறுப்பினர்கள் கலந்துகொண்டர்.
இந்தக் கூட்டத்தில், மாநிலங்களின் முன் அனுமதி பெறாமல் மேகதாதுவில் எந்தவொரு கட்டுமானப் பணியையும் மேற்கொள்ளக்கூடாது. கர்நாடக அரசின் மேகதாது அணை கட்டும் திட்டத்திற்கு தொடர்புடைய மத்திய அரசின் அமைச்சகங்கள் எவ்விதமான அனுமதிகளையும் வழங்கக் கூடாது என மத்திய அரசை கேட்டுக்கொள்வது.
மேகதாது அணை அமைப்பதற்கான முயற்சிகளைத் தடுப்பதில் தமிழக அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் அனைத்துக் கட்சிகளும் தங்களுடைய முழு ஆதரவையும், முழு ஒத்துழைப்பையும் வழங்கும்.
தமிழக மக்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பை முழுமையாக பிரதிபலிக்கும் வகையில், இக்கூட்டத்தின் தீர்மானங்களை மத்திய அரசிடம் அனைத்துக் கட்சியினரும் நேரில் சென்று முதல்கட்டமாக வழங்குவது. அதன்பிறகு, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்கு உள்ளிட்ட சட்டப்பூர்வ நடவடிக்கைகள் மற்றும் தேவைப்படும் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வது’ என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.