தமிழகத்தில் அதிக வருவாய் ஈட்டிய கட்சி எது தெரியுமா..?: ஏடிஆர் அறிக்கை..!
தமிழகத்தில் அதிக வருவாய் ஈட்டிய கட்சி எது தெரியுமா..?: ஏடிஆர் அறிக்கை..!

இந்திய தேர்தல் ஆணையத்திடம் மாநில கட்சிகள் சமர்ப்பித்த ஆண்டு வருமான அறிவிப்புகளை ஆய்வு செய்த ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது: ‘2020 - 2021-ல் பகுப்பாய்வு செய்யப்பட்ட 31 பிராந்தியக் கட்சிகளில் திமுகதான் அதிக வருமானம் மற்றும் செலவினங்களைக் கொண்டது ஆகும்.
அதன் செலவு மொத்த வருமானத்தில் பாதிக்கும் மேலாகும். பகுப்பாய்வு செய்யப்பட்ட 31 கட்சிகளின் மொத்த வருமானம் ரூ.529.41 கோடி. இதில் திமுக ரூ.149.95 கோடி என்றும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ரூ.107.99 கோடி, பிஜு ஜனதா தளம் ரூ. 73.34 கோடி ஆகும்.
அதே நேரத்தில், கட்சிகள் மொத்தம் ரூ.414.02 கோடியை செலவாக அறிவித்துள்ளன. அதில், திமுகவின் கணக்கு ரூ.218.49 கோடி. தெலுங்கு தேசம் கட்சி ரூ.54.76 கோடி. அதிமுக ரூ.42.36 கோடி.
31 கட்சிகளும் தேர்தல் பத்திரங்கள் தங்கள் வருமானத்திற்கான 47.34 சதவீதம் ஆதாரம் என்று தெரிவித்துள்ளன. 2019 - 2020-ம் ஆண்டில், ஏழு தேசியக் கட்சிகளின் வருமானத்தில் 62 சதவீதத்துக்கும் அதிகமானவை தேர்தல் பத்திரங்கள் மூலம் வந்ததாக அறிக்கை கூறுகிறது.
தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வருவதற்கு முந்தைய ஆண்டான 2019 - 2020-ம் நிதியாண்டில் அக்கட்சியின் வருமானம் 64.90 கோடி ரூபாயாக இருந்தது. இது, கடந்த ஆண்டில் 149.95 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
அதிமுக 34 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளது. அக்கட்சி ஆட்சியில் இருந்த 2019 - 2020-ல், 89 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியது.
இந்தத் தொகை, 2020 - 2021-ல் 34 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. அதே நேரத்தில், மதிமுக, பாமக ஆகிய கட்சிகளின் வருமானம் கடந்த ஆண்டை விட உயர்ந்துள்ளது.
அதன்படி, கடந்த 2019-ல் ரூ.1.50 கோடியாக இருந்த மதிமுகவின் வருமானம் 2020-ல் ரூ.2.86 கோடியாக உயர்ந்துள்ளது. பாமகவின் வருமானம் 55.60 லட்சம் ரூபாயில் இருந்து 1.16 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது’ என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

