’டாக்டர்’படம் முடிந்தது...! ரிலீஸ் தேதி அறிவிப்பு..!
’டாக்டர்’படம் முடிந்தது...! ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘டாக்டர்’ படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
’கோலமாவு கோகிலா’, ‘மான்ஸ்டர்’ படங்களை தொடர்ந்து நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள படம் ‘டாக்டர்’. கதாநாயகனாக சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். ப்ரியங்கா அருள், காமெடி டைம் அர்ச்சனா, யோகி பாபு, வினய் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
எஸ்.கே. புரொடக்ஷன்ஸ் மற்றும் கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். அனிருத் ரவிச்சந்திரன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். ஏற்கனவே, டாக்டர் படத்தின் ‘செல்லம்மா செல்லமா’ பாடலின் சிங்கிள் டிராக் வெளியாகி பட்டி தொட்டி எங்கும் ஹிட்டடித்து வருகிறது.
கடந்தாண்டு முழுக்க சென்னை, ஹைதராபாத், கோவா போன்ற இடங்களில் ஷூட்டிங் நடத்தி முடிக்கப்பட்டது. இந்தாண்டு முதல் இதற்கான போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் துவங்கின. அண்மையில் டப்பிங் பணிகள் அனைத்தும் முடிந்ததாக சிவகார்த்திகேயன் ட்வீட் செய்திருந்தார்.
இந்நிலையில் வரும் மார்ச் 26-ம் தேதி ’டாக்டர்’ படம் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சிவகார்த்திகேயன் படங்கள் மாஸ் எண்டர்டெயின்மென்ட் வகையை சேர்ந்தது என்பதால், ரசிகர்களிடையே இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை பெற்றுள்ளது.
#doctorfrommarch26 😊 pic.twitter.com/vvmeVsIdkQ
— Nelson Dilipkumar (@Nelsondilpkumar) February 3, 2021
டாக்டர் படத்திற்கு அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடித்துள்ள ’அயலான்’ படம் திரைக்கு வரவுள்ளது. தற்போது படத்திற்கான இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. அடுத்ததாக, சிபி சக்ரவர்த்தி இயக்கும் ‘டான்’ படத்தில் நடிப்பதற்காக அவர் கமிட் செய்யப்பட்டுள்ளார். கடந்த 2 தினங்களுக்கு முன்பு அப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி வரவேற்பை பெற்றது.
டாக்டர் படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார்தொடர்ந்து விஜய் நடிக்கும் 65-வது படத்தை இயக்கவுள்ளார். இதற்கான அறிவிப்பு சமீபத்தில் தான் வெளியானது. நெல்சன் மற்றும் விஜய் கூட்டணியில் உருவாகும் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

