தமிழுக்கு தனி அமைச்சகம் இருப்பதை திமுக விரும்பவில்லையோ..? - சீமான்
தமிழுக்கு தனி அமைச்சகம் இருப்பதை திமுக விரும்பவில்லையோ..? - சீமான்

“தமிழ் வளர்ச்சித்துறையை ‘தமிழ் ஆட்சி மொழி மற்றும் பல தமிழ்ப் பண்பாட்டுத்துறை என்று திமுக மாற்றி தொழில்துறை அமைச்சரிடம் ஒப்படைத்திருப்பது தவறானது” என, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியிருக்கிறார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்மொழியின் வளர்ச்சிக்கான பணிகளை மேற்கொள்வதற்காக உருவாக்கப்பட்ட அமைச்சகமான ‘தமிழ் வளர்ச்சித்துறை’ அமைச்சகத்தை எவ்வித முன்னறிவிப்புமின்றி, ‘தமிழ் ஆட்சி மொழி மற்றும் பல தமிழ்ப் பண்பாட்டுத்துறை’ எனப் பெயர் மாற்றம் செய்து அதனைத் தொழிற்துறை அமைச்சருக்கு கூடுதல் பொறுப்பாய் அளித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
இன்னுயிர் தமிழைக் காக்க நடந்தேறிய மொழிப்போர் ஏற்படுத்திய அரசியல் தாக்கத்தை மூலதனமாகக் கொண்டு ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றிய திமுக, தமிழ் மொழிக்கென இருக்கும் ஒரே அமைச்சகத்தையும் மெல்ல உருமாற்றிச் சிதைக்கும் வேலையில் ஈடுபடுவது வன்மையான கண்டனத்திற்குரியது.
தமிழ்ப்பண்பாட்டு விழுமியங்களை மீட்கவும், தொல்லியல் கூறுகளைக் காக்கவும் செயல்பட அரசுக்கு நோக்கமிருந்தால், அதற்கெனத் தனியாக ஒரு அமைச்சகத்தை உருவாக்கியிருக்கலாம். அதனை விடுத்து, மொழி வளர்ச்சிக்கென இருந்த ஒரே அமைச்சகத்தை, ‘பண்பாட்டுத்துறை’ என மாற்றிப் பொதுமைப்படுத்தியிருப்பது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல.
கடந்த அதிமுக ஆட்சியில்கூடத் தமிழ் வளர்ச்சித்துறைக்கெனத் தனி அமைச்சரை நியமித்துத் தனித்துவமாகச் செயல்படுவதற்கான வாய்ப்பளிக்கப்பட்ட நிலையில், அத்தகைய குறைந்தபட்ச முக்கியத்துவத்தைக்கூடத் தரமறுத்து, மொழி வளர்ச்சித்துறையைத் தொழிற்துறை அமைச்சகப் பொறுப்பை வகிப்பவருக்குக் கூடுதல் பொறுப்பாகத் தற்போதைய அரசு அளித்திருப்பது பெரும் ஏமாற்றத்தைத் தருகிறது.
இதிலிருந்து, மொழிக்கெனத் தனி அமைச்சகம் இருப்பதை ஆளும் திமுக அரசு விரும்பவில்லையோ? என்ற ஐயம் எழுகிறது. செம்மொழியாம் தமிழ்மொழிக்கு மத்திய அரசின் அங்கீகாரத்தைப் பெறுவதனாலோ, அரசு அலுவலகங்களின் உயரத்தில் பெயரளவுக்கு, ‘தமிழ் வாழ்க’ எனப் பெயர்ப்பலகை வைப்பதினாலோ மட்டும் தமிழ் நிலைபெற்று விடுவதில்லை என்பதனை தமிழக அரசு உணரவேண்டும்.
ஆகவே, இனியாவது ஆளும் திமுக அரசு தனது தவறினை உணர்ந்து, தமிழ் வளர்ச்சிக்கான பணிகளை முன்பைவிட வேகமாகச் செய்வதற்கு, தமிழ் வளர்ச்சித் துறையை இன்னும் அதிக அதிகாரங்களுடன் மீண்டும் தனித்துறையாக உருவாக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வேறொரு துறையின் கீழ் கூடுதல் பொறுப்பாகத் தமிழ் வளர்ச்சித்துறைத் துறையை ஒப்படைத்து தமிழ்மொழியை அவமதிக்கும் செயலைக் கைவிட்டு, அத்துறை சார்ந்த ஆற்றல் கொண்டவரை அமைச்சராக நியமிக்க வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழக அரசை வலியுறுத்துகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
Tags:
Next Story

