டில்லியில் துரைமுருகன் - எல்.முருகன் சந்திப்பு: தமிழ்நாடு தாண்டுனா எல்லோரும் நண்பர்தான்..!
டில்லியில் துரைமுருகன் - எல்.முருகன் சந்திப்பு: தமிழ்நாடு தாண்டுனா எல்லோரும் நண்பர்தான்..!

தமிழக அரசியலில் தனது கிண்டலான பேச்சின் மூலம் அனைவரையும் கவர்ந்தவர் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன். திமுகவினர் மட்டுமின்றி மாற்றுக் கட்சியினரும் அவருடைய பேச்சை ரசித்து கேட்பதுண்டு. இந்நிலையில், மூன்று நாள் பயணமாக துரைமுருகன் டில்லி சென்றுள்ளார்.
அங்கு, மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்தை சந்தித்த துரைமுருகன், மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டும் விவகாரம், தென் பெண்ணை ஆற்றின் கிளை நதியான மார்க்கண்டேய நதியின் குறுக்கே கட்டப்படும் அணை ஆகிய விவகாரங்கள் தொடர்பாக பேசினார்.
இந்த சந்திப்புக்கு பின்னர் சாணக்கியபுரியில் உள்ள தமிழ்நாடு அரசு இல்லத்திற்கு துரைமுருகன் திரும்பினார். அப்போது, அதே இல்லத்தில் தங்கியிருந்த தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் மற்றும் எம்எல்ஏ-க்கள் நயினார் நாகேந்திரன், எம்.ஆர் காந்தி ஆகியோரும் துரைமுருகனும் எதிர்பாராத விதமாகச் சந்தித்து கொண்டனர்.
அப்போது எல்.முருகன், “அய்யா வணக்கம், நல்லா இருக்கீங்களா..?" என துரைமுருகனிடம் நலம் விசாரித்தார். அப்போது செய்தியாளர் ஒருவர், “உங்களுடைய நண்பர்கள் வந்திருக்காங்க…” என கேலியாக துரைமுருகனிடம் கூற, அதற்கு துரைமுருகன் “தமிழ்நாடு தாண்டினால் அனைவரும் நண்பர்கள் தான்” என்று கூறி அங்கிருந்தவர்களை சிரிக்க வைத்தார்.

