அதிமுகவில் புதிய பொருளாளர்.. நியமித்தார் எடப்பாடி பழனிசாமி..!
அதிமுகவில் புதிய பொருளாளர்.. நியமித்தார் எடப்பாடி பழனிசாமி..!

சென்னை வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று காலை 9:15 மணி அளவில் அதிமுக பொதுக்குழுக் கூட்டம் தொடங்கியது.
இந்தக் கூட்டத்தில், இரட்டைத் தலைமை ரத்து, பொதுச் செயலாளர் பதவியை மீண்டும் கொண்டு வருவது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
மேலும், பொதுச் செயலாளர் தேர்ந்தெடுக்கப்படும் வரை, இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை நியமிக்கும் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
இதைத் தொடர்ந்து, அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவோடு, இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதற்கிடையே, கட்சி நலனுக்கு எதிராக செயல்பட்ட ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவருடைய ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதை அடுத்து, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் நீக்கப்படுவதாக பொதுக்குழுவில் அறிவிக்கப்பட்டது. இதன்படி, அதிமுக பொருளாளர் உள்ளிட்ட பதவிகள் ஓ.பன்னீர்செல்வத்திடம் இருந்து பறிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அதிமுகவின் புதிய பொருளாளராக, முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனை நியமித்து, இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

