இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு.. 4 மாதங்களுக்குள் தேர்தல்..!
இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு.. 4 மாதங்களுக்குள் தேர்தல்..!

அதிமுக பொதுக்குழுவில், இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட நிலையில், 4 மாதங்களுக்குள் கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் தேர்வு செய்யும் வகையில் பொதுச் செயலாளர் தேர்தல் நடத்தப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வை ரத்து செய்து பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து, அதிமுக நிரந்தர பொதுச் செயலாளர் ஜெயலலிதா என்ற விதி ரத்து செய்யப்பட்டு, இடைக்கால பொதுச்செயலாளர் பதவியை உருவாக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதன்படி, எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். அடுத்த 4 மாதங்களுக்குள் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை நடத்த முடிவு செய்யப்பட்டது.
மேலும், அதிமுக பொதுச் செயலாளரை கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் தேர்வு செய்யும் வகையில் விதிகளில் மாற்றம் கொண்டு வரப்பட்டது.
பொதுச்செயலாளராக போட்டியிடுபவர் தலைமைக் கழக நிர்வாகி பொறுப்பில் 5 ஆண்டுகள் இருந்திருக்க வேண்டும் என்றும், அவர் கட்சியில் 10 ஆண்டுகள் அடிப்படை உறுப்பினராக இருந்திருக்க வேண்டும் எனவும் விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பொதுச்செயலராக போட்டியிடுபவர்களை 10 மாவட்ட செயலாளர்கள் வழிமொழிய வேண்டும், ஆதரிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
பொதுச் செயலாளர் குறித்த விதியை மட்டும் திருத்தவோ, மாற்றவோ முடியாது. ஆனால், கட்சி விதிகளை தளர்த்துவதற்கு பொதுச்செயலாளருக்கு அதிகாரம் அளிக்க முடிவு செய்யப்பட்டது.
பொதுச்செயலராக தேர்ந்தெடுக்கப்படுபவர் 5 ஆண்டுகள் பதவியில் நீடிப்பார். தேர்தல் நடத்தும் அதிகாரிகளாக நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல், துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு தேர்தல் நடத்தி நிர்வாகிகளை தேர்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. துணை பொதுச் செயலாளரை, பொதுச் செயலாளரே நியமிப்பார் எனக் கூறப்பட்டுள்ளது.

