2ஆண்டுகளுக்கு முன் பதவியேற்ற அதே நாளில் ராஜினாமா செய்த எடியூரப்பா..! என்ன காரணம்?
2ஆண்டுகளுக்கு முன் பதவியேற்ற அதே நாளில் ராஜினாமா செய்த எடியூரப்பா..! என்ன காரணம்?

கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை மாதம் 26-ந் தேதி கர்நாடக மாநில முதல்வராக எடியூரப்பா 4-வது முறையாக பதவி ஏற்றார். 75 வயதை தாண்டிய தலைவர்களுக்கு பாஜகவில் கட்டாய ஓய்வு அளிக்கப்படுகிறது. ஆனால் அதிலிருந்து அப்போது 76 வயதான எடியூரப்பாவுக்கு விலக்கு அளித்து முதல்வர் பதவியை பாஜக மேலிடம் வழங்கியது.
மேலும், 2 ஆண்டுகள் முடிந்ததும் முதல்வர் பதவியை விட்டுக்கொடுக்க வேண்டும் என்று அப்போதே நிபந்தனையும் விதிக்கப்பட்டது. அதன்படி முதல்வர் பதவி ஏற்று இன்றுடன் 2 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், முதல்வர் பதவியை எடியூரப்பா ராஜினாமா செய்துள்ளார்.
தனது ராஜினாமா கடிதத்தை மாநில ஆளுநரிடம் அளித்த பின்பு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், “ராஜினாமா செய்யுமாறு எனக்கு யாரும் நெருக்கடி தரவில்லை. ஏற்கனவே உறுதி அளித்த படி 2 ஆண்டுகள் பதவியை நிறைவு செய்து விட்டு ராஜினாமா செய்துள்ளேன்.
என் மீது மதிப்பு வைத்து கர்நாடகா முதல்வராக மக்களுக்கு சேவை செய்ய 2 ஆண்டுகள் வாய்ப்பு கொடுத்த பிரதமர் மோடி, நட்டா மற்றும் அமித்ஷாவுக்கு நன்றி.
அடுத்த சட்டமன்ற தேர்தலில் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்க பாடுபடுவேன். எனக்கு பிறகு முதல்வராக பதவியேற்பவர் யார் என்ற விவரம் எனக்கு கொடுக்கப்படவில்லை” என்று தெரிவித்தார்.

