சங்கீதா ஓட்டல் பாத்ரூமில் செல்போனை வைத்து பெண்களை வீடியோ எடுத்த ஊழியர் கைது..!!
சங்கீதா ஓட்டல் பாத்ரூமில் செல்போனை வைத்து பெண்களை வீடியோ எடுத்த ஊழியர் கைது..!!

சென்னை மதுரவாயல் பகுதியைச் சேர்ந்தவர் பாரதி. மதுரவாயில் திமுக மகளிர் அணி நிர்வாகியாக செயல்பட்டு வருகிறார். நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக நேர்காணலுக்கு வந்த போது, கிண்டி ரயில் நிலையத்திற்கு அருகே உள்ள பிரபல உணவகமான சங்கீதா ஓட்டலில் மதிய உணவு சாப்பிட சென்றுள்ளார்.
அப்போது உணவகத்தில் உள்ள பாத்ரூமை பயன்படுத்த செல்லும் போது, பாத்ரூமில் உள்ள சுவற்றில் அட்டைப் பெட்டி ஒன்று இருப்பதைக் கண்டு சந்தேகம் அடைந்தார்.
அதை எடுத்துப் பார்க்கும் போது செல்போன் கேமரா வீடியோ பதிவாகி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து தன்னுடன் வந்த உறவினர்களோடு செல்போனை பறிமுதல் செய்து ஹோட்டல் நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளார்.
உடனடியாக கிண்டி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்த உடன் சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்து வந்தனர்.
விசாரணை செய்ததில் உணவக ஊழியர் கண்ணன்(எ) தவக்கண்ணன் என்பவர், தனது செல்போனை பாத்ரூமில் வைத்து பெண்களை ரகசியமாக வீடியோ எடுத்தது தெரியவந்துள்ளது. உணவக ஊழியர் கண்ணனை காவல் நிலையம் அழைத்து சென்ற கிண்டி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
கண்ணன் பயன்படுத்திய செல்போனை பறிமுதல் செய்து போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் குற்றச்சாட்டில் சிக்கிய உணவக ஊழியரான கண்ணன் என்பவர் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் எனவும் கடந்த 3 மாதமாகத்தான் உணவகத்தில் பணிபுரிந்து வந்ததாகவும் தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக கிண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்த திமுக மகளிரணி நிர்வாகி பாரதி, ஒரு கும்பலாக சேர்ந்து இதுபோன்று பாத்ரூமில் பெண்களை வீடியோ படம் எடுக்கும் செயலில் ஈடுபட்டிருக்கலாம் என குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கிண்டி போலீசார் செல்போனை சைபர் ஆய்வகத்திற்கு அனுப்பி ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். பிடிபட்ட கண்ணன் எத்தனை நாட்கள் இது போன்று பெண்களை ரகசியமாக வீடியோ எடுத்துள்ளார். கண்ணனுக்கு உடந்தையாக செயல்பட்டது யார் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், பெண்ணுக்கு களங்கம் ஏற்படுத்துதல், ஆபாசமாகப் பேசுதல், தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.

