நான் கூறியது சரியே என அனைவரும் தற்போது உணர்கின்றனர்.. டிரம்ப் மீண்டும் அதிரடி!
நான் கூறியது சரியே என அனைவரும் தற்போது உணர்கின்றனர்.. டிரம்ப் மீண்டும் அதிரடி!

உலக நாடுகளை இன்றளவும் தவித்துக்கொண்டிருப்பதற்கு காரணம் கொரோனா வைரஸ். இந்த கொடிய வைரஸ் முதன் முதலாக சீனாவின் வூகான் நகரில் தான் கண்டறியப்பட்டது. கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் இந்த வைரஸ் முதலில் சீனாவில் பரவி பின் உலக நாடுகளிலும் தனது கோர முகத்தை காட்டியது.
வைரஸ் பாதிப்பால் வல்லரசு நாடான அமெரிக்காவும் மிகக் கடுமையான பாதிப்பை எதிர்கொண்டுள்ளது. வைரஸ் பரவல் தொடங்கியதும் அப்போது அமெரிக்க அதிபராக இருந்த டொனால்டு டிரம்ப், சீனா மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார். குறிப்பாக சீனா தான் வைரஸை பரப்பியதாக அதிரடியாக குற்றம்சாட்டினார். ஆனால் சீனா இந்தக் கூற்றை திட்டவட்டமாக மறுத்து வருகிறது.

இதற்கிடையே, வூஹானில் உள்ள ஒரு ஆய்வகத்தில் இருந்தே வைரஸ் பரவியதற்கான ஆதாரங்கள் வலுவடைந்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால், அந்த செய்திகளில் இடம்பெற்ற தகவல்களை கண்டித்துள்ள சீனா, அந்த வைரஸ் அமெரிக்க ஆய்வகத்தில் இருந்து கூட வந்திருக்கலாம் என்று கூறியுள்ளது. கொரோனா வைரஸின் மூலத்தை 90 நாட்களில் கண்டுபிடியுங்கள் என தங்கள் உளவுத்துறைக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில், கொரோனா வைரசின் தோற்றம் குறித்து நான் முன்பே கூறியது சரியென நிரூபிக்கப்பட்டுள்ளது என்று டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் இது தொடர்பாக கூறிப்போது, சீன வைரஸ் வூகான் ஆய்வகத்தில் இருந்தே பரவியது என நான் கூறியது சரியே என தற்போது அனைத்து தரப்பினரும் குறிப்பாக எதிரி என்று சொல்லப்படுபவர்களும் கூறத்தொடங்கியுள்ளனர்.

கொரோனா வைரஸ் மூலம் உலகுக்கு ஏற்படுத்திய பேரழிவுக்காக அமெரிக்கா மற்றும் பிற உலக நாடுகளுக்கு சீனா 10 டிரில்லியன் டாலர் வழங்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
newstm.in

