பரபரப்பு! ஒரு கோடி ரூபாய் கேட்டு கடத்தப்பட்ட சிறுவன்!!
பரபரப்பு! ஒரு கோடி ரூபாய் கேட்டு கடத்தப்பட்ட சிறுவன்!!

கள்ளக்குறிச்சி அருகே ஒரு கோடி ரூபாய் பணம் கேட்டு கடத்தப்பட்ட நான்கு வயது சிறுவனை போலீசார் பத்திரமாக மீட்டனர்.
அக்கராயபாளையம் கிராமத்தைச் சேர்ந்த கௌரி -லோகநாதன் தம்பதிகளின் மகனான 4 வயது சிறுவன் தருண் வீட்டில் தாய் தந்தையுடன் உறங்கிக் கொண்டிருந்த போது திடீரென காணாமல் போனார். இதுகுறித்து கச்சிராயபாளையம் காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர்.
போலீசார் அச்சிறுவனின் வீட்டின் அருகில் உள்ள உறவினர்கள் மற்றும் தெரிந்தவர்கள் வீடுகளிலும், அருகிலுள்ள நீர்நிலைகளான விவசாய கிணறுகள் மற்றும் கோமுகி ஆற்றின் கரைப்பகுதிகளிலும் குப்பை கூடங்களிலும் மோப்பநாய் உதவியுடன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இதையடுத்து இரண்டு தனிப்படைகள் அமைத்து கச்சிராயபாளையம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் உள்ள சிசிடிவி கேமராக்கள் மூலமும் கோமுகி ஆறு உள்ளிட்ட நீர்நிலைப்பகுதிகளிலும் தீவிரமாக தேடி வந்தனர்.
சிறுவனின் குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் செல்போன் எண்களை வைத்து அவற்றுள் பகிரப்படும் தகவல்களையும் தீவிரமாக கண்காணித்து வந்தனர். அப்போது பெற்றோருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.
பங்காரம் என்ற பகுதியில் இருந்து தொலைபேசி மூலம் ‘ உங்கள் மகன் எங்களிடம் தான் உள்ளான். 1 கோடி ரூபாய் பணம் கொடுத்தால் சிறுவன் தருணை உயிருடன் உங்களிடம் ஒப்படைக்கின்றோம் பெற்றோருக்கு மர்ம நபர்கள் மிரட்டல் விடுத்தனர்.

உடனடியாக காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்தப் பகுதியை சுற்றி வளைத்த பொழுது பொலிரோ காரில் இரண்டு பேர் அந்த சிறுவனை அமர வைத்துக் கொண்டிருந்தது தெரியவந்தது. கடத்தல்காரர்களை மடக்கி பிடித்ததோடு சிறுவன் தருணையும் போலீசார் உயிருடன் மீட்டனர்.
சிறுவனை கடத்திய அவனது உறவினரான சுந்தர சோழன் மற்றும் ஈஸ்டர்ராஜ் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளியான அருள் என்பவன் குறித்து தெரியவந்தது.
இதையடுத்து அருளை கள்ளக்குறிச்சி போலீசார் கைது செய்தனர். சிறுவன் கடத்தல் வழக்கில் தலைமறைவாக உள்ள ரகுபதி என்பவரை தேடி வருகின்றனர்.
newstm.in

