பரபரப்பு! சீருடையில் இருந்த போலீஸ் மீது தாக்குதல் நடத்திய கும்பல்!!
பரபரப்பு! சீருடையில் இருந்த போலீஸ் மீது தாக்குதல் நடத்திய கும்பல்!!

புதுச்சேரி அருகே பெட்ரோல் பங்க்கில், சீருடையில் இருந்த விழுப்புரம் காவலர் மீது 3 பேர் கும்பல் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் வானூர் பகுதியைச் சேர்ந்த சதீஸ்குமார் (33) என்பவர் கோட்டக்குப்பம் காவல்நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார். அவர் மரக்காணம் அருகேயுள்ள கீழ்புத்துபட்டு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.
பணி முடிந்து காவல்நிலையம் திரும்பும்போது, புதுச்சேரி பகுதியான கனகசெட்டிக்குளம் பெட்ரோல் பங்கில் தனது மோட்டார் சைக்கிளுக்கு சதீஸ்குமார் பெட்ரோல் நிரப்பினார்.

அப்போது, ஒரே பைக்கில் வந்த 3 பேர் கும்பல், பெட்ரோல் நிரப்ப சதீஸ்குமாரிடம் பணம் கேட்டுள்ளனர். இதற்கு அவர் மறுப்பு தெரிவித்தார். இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல், சதீஷ்குமார் கன்னத்தில் அறைந்து, அவரை காலால் எட்டி உதைத்து சரமாரியாக தாக்கி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றது.
இந்தச் சம்பவம் குறித்து காலாப்பட்டு காவல்நிலையத்தில், சதீஷ்குமார் புகார் தெரிவித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் காவலர் சதீஸ்குமாரை தாக்கியது, விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியை சேர்ந்த ராஜதுரை, குருநாத், கூனிமேடு பகுதியைச் சேர்ந்த மூர்த்தி என்பது தெரியவந்தது.

இதையடுத்து மூர்த்தியை போலீஸார் கைது செய்தனர். தலைமறைவாக இருக்கும் மற்ற 2 பேரை தேடி வருகின்றனர். குடிபோதையில் 3 பேர் போலீஸை தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in

