பரபரக்கும் உ.பி. சட்டமன்ற தேர்தல்.. மாயாவதி அறிவிப்பால் 4 முனை பேட்டி !!
பரபரக்கும் உ.பி. சட்டமன்ற தேர்தல்.. மாயாவதி அறிவிப்பால் 4 முனை பேட்டி !!

உத்தர பிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. அங்கு மாநில கட்சிகளிடம் இருந்து ஆட்சியை பறித்து பாஜக ஆட்சி செய்து வருகிறது. வரவுள்ள தேர்தலில் மீண்டும் யோகி ஆதித்யநாத்தை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தி பாஜக தேர்தலை சந்திக்கிறது. கடந்த தேர்தலில் இந்தியாவின் பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் எளிதாக வெற்றிபெற்ற பாஜகவுக்கு இந்த தேர்தல் சவால் நிறைந்ததாக உள்ளது.
கொரோனா 2ஆவது அலையின்போது யோகி ஆதித்யநாத் அரசு எடுத்த நடவடிக்கை மற்றும் கங்கை ஆற்றில் சடலங்கள் மிதந்து வந்த சம்பவம், லக்கிம்பூர் சம்பவம் ஆகியவை சவாலாக இருக்கும் என கருதப்படுகிறது. அதோடு அங்கு மருத்துவக்கட்டமைப்பு அவலம் குறித்தும் கொரோனா காட்டியுள்ளது.

அதேநேரத்தில், காங்கிரஸ் கட்சி பிரியங்கா காந்தியை முன்னிறுத்தி தேர்தலை சந்திக்க திட்டமிட்டுள்ளது. இவர் தேர்தல் பணியை தொடங்கிவிட்டார். லக்கிம்பூர் வன்முறையில் உயிரிழந்தவர்களின் வீடுகளுக்கு சென்று ஆறுதல் கூறினார். மேலும் பாஜக அரசுக்கு எதிராக அடுத்தடுத்து யாத்திரை மேற்கொண்டு பெண்கள் வாக்குகளை கவரும் வகையில் பல்வேறு அறிவிப்புகளை அவர் வெளியிட்டு வருகிறார்.
அதேபோல், சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவும் தேர்தல் பணியை தொடங்கிவிட்டார். இந்த நிலையில் உத்தர பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சர் மாயாவதி, சட்டசபை தேர்தலில் பி.எஸ்.பி. கட்சி தனித்து போட்டியிடும் என அறிவித்துள்ளார்.
இதுகுறித்து மாயாவதி கூறுகையில், சட்டசபை தேர்தலில் பி.எஸ்.பி. எந்தக்கட்சியுடனும் தேர்தல் ஒப்பந்தம் செய்யாது. எங்களுடைய பலத்தில் தனித்து போட்டியிடுவோம். அனைத்து சமுதாய மக்களை ஒன்றிணைத்து அவர்களுடன் கூட்டணி வைப்போம். அது நிலையான கூட்டணி. எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்கும் எண்ணம் இல்லை என்றார்.
newstm.in

