விவசாயிகள் நாளை அடுத்தக்கட்ட போராட்டம்... அமித் ஷா தீவிர ஆலோசனை !!
விவசாயிகள் நாளை அடுத்தக்கட்ட போராட்டம்... அமித் ஷா தீவிர ஆலோசனை !!

டெல்லி எல்லைகளில் போராடி வரும் விவசாயிகள் அடுத்ததாக நாளை "சக்கா ஜாம்" என்ற பெயரில் நாடு முழுவதும் முக்கிய சாலைகளில் டிராக்டர்களை நிறுத்தி போராட்டம் நடத்த முடிவெடுத்துள்ளனர். நண்பகல் 12 மணி முதல் மாலை 3 மணி வரை போராட்டம் நடைபெறும் என்று விவசாயிகள் சங்கங்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்தப்போராட்டத்துக்கு பஞ்சாப், அரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் போராட்டத்திற்கு வரும்படி அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. சக்கா ஜாம் எனப் பெயரிப்பட்டுள்ள இந்தப் போராட்டமும் மிகப்பெரிய அளவில் நடத்த விவசாயிகள் தரப்பில் தீர்மானிக்கப்பட்டு உள்ளது.
இதனால்தான் விவசாயிகளை தடுக்க, டெல்லி- உத்தரப்பிரதேசம் எல்லையான காசிப்பூர், டெல்லி-அரியானா எல்லையான டிக்ரி, அரியானா எல்லையான சிங்குவில் சாலையில் முள்வேலி, தடுப்புச்சுவர், கூர்மையான ஆணிகளை சாலையில் பதித்தல், பாதுகாப்பை 3 மடங்காக அதிகரித்தல் என அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்த நிலையில், இந்த போராட்டம் தொடர்பாக எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற வளாகத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், டெல்லி காவல் ஆணையர் ஸ்ரீவஸ்தவா மற்றும் உளவுத்துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரிகளுடன் நேற்று உயர்மட்ட ஆலோசனை நடத்தினார்.

டிராக்டர் பேரணி போன்று இந்த போராட்டத்தில் எந்தவித வன்முறைச் சம்பவங்கள் ஏற்படாமல் இருப்பது குறித்து ஆலோசனைக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
newstm.in

